இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிக்க 3 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் பரிந்துரையை அந்நாடு நிராகரித்தது.
முன்னதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கொழும்புவில் இந்த வாரம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டார்.
அந்தக் கருத்தரங்கில் பேசிய அவர், “மன்னார் வளைகுடா பகுதியில் இந்தியாவின் தரமான மீன்கள், இறால்கள் முழுவதும் பிடிக்கப்பட்டுவிட்டன. ஏற்றுமதித் தரம் மிக்க மீன்கள், இறால்கள் தற்போது இலங்கைக் கடற்பகுதியில்தான் உள்ளது.
எனவே, இந்தியப் பகுதியில் மீன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மூன்று ஆண்டுகளுக்கு இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி கோர வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னா இதுகுறித்து சனிக்கிழமை கூறுகையில், “சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை’ என்றார்.
மீனவர்கள் விவகாரம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி இந்தியா-இலங்கை அதிகாரிகள் தில்லியில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ள நிலையில் இலங்கை அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு மன்னார் மீன்வளத்துறை கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
“இந்திய மீனவர்களின் மீன்பிடி முறையால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தக் கூட்டமைப்பின் தலைவர் ஜஸ்டின் ஜோய்ஸா வேண்டுகோள் விடுத்துள்ளார்.