தென் கொரியக் கப்பல் முழ்கிய விபத்தில் இன்னும் மீட்கப்படாமல் இருக்கும் சுமார் 300 பேரைத் தேடும் முயற்சிகள் தொடர்கின்றன. இதில் பெரும்பாலானோர் மாணவர்கள்.
கப்பலில் சென்ற சுமார் 470 பேரில் இதுவரை 179 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இரவு முழுவதும், தேடும் விளக்குகளைப் பயன்படுத்தி அவசரச் சேவைப் பணியாளர்கள் தேடினர். ஆனாலும், கடலில் சுழல் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள், கப்பலுக்குள் நுழைய முயன்ற முயற்சிகள் பாதிக்கப்பட்டன.
இது வரை குறைந்தது ஒன்பது பேர் இறந்திருக்கின்றனர்.
இந்தக் கப்பல் இன்ச்சியோன் துறைமுகத்திலிருந்து தென்புற உல்லாச விடுமுறைத் தீவான ஜெஜூவிற்குச் சென்று கொண்டிருந்தது.
கப்பல் கவிழ்ந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இந்தப் பகுதியில் கடல் நீரின் ஆழம் சுமார் 30 மீட்டராக இருந்தது. இந்தத் தேடல் முயற்சிகளுக்கு உதவ அமெரிக்காவும் தனது கடற்படைக் கப்பலான, யு.எஸ்.எஸ்.போன்ஹோம் ரிச்சர்ட் என்ற கப்பலை அனுப்பியிருக்கிறது.