தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது. கோவை காய்கறி சந்தையில் வழக்கமாக விற்கப்படும் விலையிலிருந்து 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
தொடர் மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், கோவை காய்கறி சந்தையில் கேரட், பீன்ஸ், தக்காளி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை திடீரென என உயர்ந்துள்ளது.
மழை காரணமாக ஊட்டி, பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கேரட் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கேரட் தற்போது 40 ரூபாய்க்கு, 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிகளின் விலை 10 ரூபாய் உயர்ந்து 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அதேபோல் சின்ன வெங்காயத்தின் விலை 10 ரூபாயும், பெரிய வெங்காயத்தின் விலை கிலோவிற்கு 10 முதல் 15 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது. மேலும், தக்காளி விலையும் 10 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் 20 ரூபாய் உயர்ந்து 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இனி முகூர்த்த நாட்கள் வர இருக்கும் நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காய்கறிகளின் திடீர் விலை ஏற்றம் பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.