எழில்மிகு நகரமான நமது சென்னை மாநகரம் தனது 376-ஆவது பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடுகிறது. சுமார் 75 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள அமைதிப் பூங்காவான சென்னை நகரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு மாநிலத்தவரும் வசித்து வருகின்றனர்.
1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி சென்னை நகரம் உருவாக்கப்பட்டது. அப்போது கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை வாங்கினார்கள்.
இந்த இடம் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. பின்னர் ஓர் ஆண்டுக்கு பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த இடத்தை விற்ற ஐய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே அமைந்த ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.