மலேசியன் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கோலாலம்பூர் விமான நிலையத்தில், எமர்ஜென்சி லேன்டிங் செய்துள்ளது. கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தின் வலது லேன்டிங் கியர் இயங்காத நிலையில், விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து இறங்கியுள்ளது.
இன்று அதிகாலை எமர்ஜென்சி லேன்டிங் செய்த மலேசியன் ஏர்லைன்ஸ் தடம் இலக்கம் MH192 விமானம், கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.09-க்கு புறப்பட்டது. பெங்களூரு செல்லவேண்டிய இந்த விமானத்தில், 159 பயணிகளும், 7 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.
விமானம் டேக் ஆஃப் செய்யப்பட்ட உடனேயே அதன் வலதுபுற லேன்டிங் கியர் சரியாக இயங்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே இந்த விமானத்தை மீண்டும் கோலாலம்பூரில் லேன்டிங் செய்வது என்ற முடிவு, கேப்டன் ஆஸ்மியால் சிறிது நேரம் பறந்த பின்னரே எடுக்கப்பட்டது. அதையடுத்து விமானம் திசை திருப்பப்பட்டு, அதிலிருந்த எரிபொருள் காலி செய்யப்பட்டு கோலாலம்பூரில் எமர்ஜென்சி லேன்டிங் செய்யப்பட்டது.
அதாவது, விமானம் சுமார் 4 மணி நேரம் பறந்திருக்கிறது.
விமானத்தில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படாமல், நேர்த்தியான முறையில் எமர்ஜென்சி லேன்டிங் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.56 மணியளவில் மீண்டும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பியது. லேண்டிங் கியரில் கோளாறு இருந்த போதும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து, விமானி நூர் ஆதம் ஆஸ்மி அப்துல் ரசாக்கை மலேசிய விமான போக்குவரத்து அமைச்சர் வெகுவாக பாரட்டினார்.
சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மலேசிய ஏர்லைன்ஸுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.