மகாராஷ்டிர முதல்வராகப் பொறுப்பேற்கப் போவது யார் என வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழா வரும் 31-ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவுக்கு ஆதரவளிக்க சிவசேனா முன்வந்துள்ளது. இதனிடையே பாஜக மாநிலத் தலைவர் தேவந்திர பட்னாவிஸ் முதல்வராவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மை இல்லை. இதைத் தொடர்ந்து நீண்ட கால கூட்டணிக் கட்சியாக இருந்து தேர்தலுக்கு முன்பு பிரிந்த சிவசேனா பாஜகவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவளிக்கத் தயார் எனக் கூறியுள்ளது.
முதல்வர் யார்?
இருப்பினும் பாஜக தரப்பில் எதையும் உறுதிப்படுத்தவில்லை. அதைப்போலவே, யார் முதல்வர் என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அல்லது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன.
கட்கரி மாநில அரசியலுக்குத் திரும்பப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
எனவே, 44 வயதான தேவேந்திர பட்னாவிஸ்தான் அடுத்த முதல்வர் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
ஆளுநர் சந்திப்பு
பாஜக எம்எல்ஏக்கள் இன்று மாலை கூடி, கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்வு செய்கின்றனர். தேர்ந் தெடுக்கப்படும் தலைவர், ஆளுநர் சி. வித்யாசாகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு விழா
முதல்வர் பதவியேற்பு விழா மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 31-ம் தேதி நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் ஆகியோர் பங்கேற்பர் என பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது.
சிவசேனா ஆதரவு
இதனிடையே பாஜகவுக்கு வெளிப்படையான ஆதரவை சிவசேனா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் கூறியிருப்பதாவது:
பாஜகவும் சிவசேனாவும் இணைந்து ஆட்சியமைத்தால் அது உறுதியான அரசாக இருக் கும். பாஜகவுடனான எங்கள் உறவு மிகப் பழமையானது. தேர்தல் நேரத்தில் என்ன நடந்திருப்பினும் அதை மறந்து விட்டோம். எங் களின் உறவு இந்தியா-பாகிஸ் தான் சண்டை போன்றதல்ல. பாஜகவுக்கு மக்கள் ஆதரவளித் துள்ளனர். அது அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜகவுக்கு ஆதர வளிப்பது எங்களின் கடமை. மகாராஷ்டிர மக்களின் நலனுக் காக பாடுபடும் எந்தவொரு முதல் வருக்கும் சிவசேனா எப்போதும் ஆதரவளிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிவசேனா, பாஜகவுக்கு ஆதர வளிக்கும் என்பது உறுதியாகி விட்ட நிலையிலும், அமைச்சரவையில் அக்கட்சிக்கு இடம் கிடைக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
சரத்பவார்
பாஜக சிறுபான்மை அரசை அமைக்கும் பட்சத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதற்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அரசுக்கு எதிராக வாக்களிக் காமல் அமைதி காப்போம். அதனால், அரசு கவிழாது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து யாரும் என்னை அணுகவில்லை. ஆனால், அதனால் பயனில்லை.
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை ஆளுநரிடம் அளிக்கப்போவதில்லை. பாஜகவும் ஆதரவுக் கடிதம் கேட்கவில்லை. சிவசேனா ஆதரவளித்தால் நாங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை. ஆனால், நாங்கள் ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம். பாஜகவுக்கு ஆதரவளிப்போம். ஆனால், அதற்காக நாங்கள் ஆட்சியில் ஒரு பகுதி என்று அர்த்தமல்ல. அரசைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம். தவிர, எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றார்.
யார் முதல்வரானாலும் ஆதரவு
பாஜகவிலிருந்து மக்களின் ஆசி பெற்ற எந்த ஒரு தலைவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவருக்கு ஆதரவளிக்கத் தயார் என சிவசேனா தெரிவித்துள்ளது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ தலையங்கத்தில் இது தொடர்பாகக் கூறியிருப்பதாவது:
லட்சுமி பூஜை தினத்தில் பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், நிதின் கட்கரியைச் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் கட்கரி, ஆர்எஸ்எஸ் தலவைரைச் சந்தித்து ஆசி பெற்றார். இந்த ஆசிர்வாதங்கள் முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மக்களின் ஆசிர்வாதம்தான் அனைத்தையும் விட முக்கியமானது.
மக்களின் ஆசியுடன் மகாராஷ்டிரத்தை முன்னெடுத்துச் செல்லும் எந்த ஒரு தலைவருக்கும் ஆதரவளிக்க சிவசேனா தயாராக உள்ளது. யார் முதல்வர் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். ஆகவே, மாநிலத் தலைவர்கள் இதுபற்றி சிந்திக்கத் தேவையில்லை. மகாராஷ்டிரத்தை மேம்படுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன் உள்ள கட்கரி மிகத் திறமையானவர். மற்றொரு புறம், ஆட்சி நிர்வாகத்தில் பட்னாவிஸுக்கு அனுபவம் இல்லை.
ஊழல் கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சியே. அந்த இரு கட்சிகளும் வீழ்த்தப்பட்டிருப்பதால் மாநிலத்துக்கு நன்மைதான்.
இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.