பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி மக்களவை தேர்தலில் போட்டியிட வதோதராவில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தான் திருமணமானவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனைவியின் பெயர் ஜசோடா பென் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் நரேந்திர மோடி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், தனது மனைவியின் பெயர் ஜசோடா பென் என்றும், அவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டார். அதே சமயம், மனைவியின் வருமானம், வருமான வரி ரிட்டர்ன் பற்றியோ, பான் கார்டு பற்றியோ எந்த தகவலும் எனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.
பெரியோர்கள் தனக்கு 17 வயதில் ஜசோதா பென்னை திருமணம் செய்து வைத்ததாகவும், திருமணமான 2 வாரங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டதாகவும் மோடி கூறியுள்ளார். குஜராத்தின் வட்நாகர் என்ற கிராமம்தான் மோடியின் சொந்த ஊர். அங்கிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது பிராமண்வடா. இந்த கிராமத்தில்தான் மோடியின் மனைவி ஜசோடா பென் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
வதோதரா தொகுதியில் மோடி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில், தனக்கு ரூ.1.5 கோடி சொத்து உள்ளதாக கூறியுள்ளார். கையிருப்பு ரூ.29,700, வங்கியில் ரூ.44 லட்சம் டெபாசிட், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பத்திரங்கள், ரூ.4.34 லட்சம் மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரங்கள் உள்ளன. மேலும், ரூ.2.47 லட்சத்துக்கு நிலம் வாங்கியதாகவும், அதன் தற்போது மார்க்கெட் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்றும், இவை எல்லாம் சேர்த்து ரூ.1.5 கோடிக்கு சொத்து உள்ளதாகவும் மோடி தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜசோதா பென் என்பவர்தான் தனது மனைவி என்று நரேந்திர மோடி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், மோடிதான் என் கணவர் என்று கூறும் ஜசோதா பென், அவர் என்றாவது ஒரு நாள் பிரதமராவார் என்பது எனக்கு தெரியும் என்று சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தன்னை புகைப்படம் எடுக்க கூடாது என்ற நிபந்தனை விதித்த ஜசோடா பென், பள்ளி ஆசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு இப்போது 62 வயதாகிறது. மாதம் ரூ.14 ஆயிரம் பென்ஷன் வருவதாக கூறியுள்ளார். தனது 17 வயதில் மோடியுடன் திருமணம் நடந்ததாகவும், 3 ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.