சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடையும் நிலயில் உள்ளன.
சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு, செயின்ட்தாமஸ் மவுண்ட் வழியாக மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை உள்ள 10 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்து ரூபாய் 15, ரூபாய் 20, ரூபாய் 25 என்று முழு தொகையாக டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
டோக்கன், ஸ்மார்ட் கார்டு என 2 வகையான டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணத்துக்கு சலுகையுடன் கூடிய சீசன் டிக்கெட் கிடையாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
டோக்கன் டிக்கெட்
டோக்கன் டிக்கெட் ஒரே ஒரு பயணத்துக்கு மட்டும் பயன்படும். டோக்கன் டிக்கெட் வாங்குபவர்கள் நுழைவு வாயிலில் இருக்கும் எந்திரத்தில் அந்த டிக்கெட்டை தேய்த்தால் தானியங்கி கதவு திறக்கும். உள்ளே சென்று ரயிலில் ஏறலாம். எந்த நிலையத்தில் இறங்க வேண்டுமோ அங்கு இறங்கி வெளியேறும் பாதையில் உள்ள எந்திரத்தில் டோக்கன் டிக்கெட்டை போட்டால் தானியங்கி வாயில் திறக்கும் வெளியே செல்லலாம். டோக்கன் டிக்கெட்டை யாரும் கையில் எடுத்துச் செல்ல முடியாது.
ஸ்மார்ட் கார்டு
இரண்டாவது வகை டிக்கெட், ‘ஸ்மார்ட் கார்டு’ ஆகும். உதாரணத்துக்கு ரூ.200 கொடுத்து ஸ்மார்ட் கார்டு வாங்குபவர், மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் நுழையும்போது அங்கே இருக்கும் ‘ஆட்டோமேட்டிக் ஃபேர் கலெக் ஷன்’ (எ.ஏப்.சி.) மிஷினில் ஸ்மார்ட் கார்டைத் தேய்க்க வேண்டும். வாயில் திறந்ததும் உள்ளே போய் மெட்ரோ ரயிலில் ஏறி பயணம் செய்யலாம். எந்த ரயில் நிலையத்தில் அவர் இறங்குகிறாரோ அங்கிருந்து வெளியேறும்போது அங்குள்ள ‘ஆட்டோமேட்டிக் ஃபேர் கலெக் ஷன் மிஷினில் ஸ்மார்ட் கார்டை’ தேய்த்துவிட்டு வெளியேற வேண்டும்.
அப்போது அவர் எந்த ரயில் நிலையத்தில் ரயில் ஏறி, எங்கு இறங்கினாரோ அதற்கான கட்டணம் தானியங்கி முறையில் ‘ஸ்மார்ட் கார்டு’ தொகையில் இருந்து கழிக்கப்படும். இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், இந்த ஸ்மார்ட் கார்டைக் கொண்டு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து, புறநகர் ரயில், பறக் கும் ரயில் போன்றவற்றில் பயணம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்படும். இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர், மாநகரப் போக்கு வரத்துக் கழக மேலாண்மை இயக்குநர், தெற்கு ரயில்வே தலைமை வர்த்தக மேலாளர் ஆகியோருடன் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட் டுள்ளன. ஒரேயொரு ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தி மேற்கண்ட பொது போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்த ஓரிரு ஆண்டுகள் ஆகும்.
டெல்லி மெட்ரோ ரயிலில் சலுகையுடன் கூடிய சீசன் டிக்கெட் வழங்கப்படுவதில்லை. அதுபோல சென்னை மெட்ரோ ரயிலிலும் சீசன் டிக்கெட் வழங்கப்படமாட்டாது.