மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி நியமிக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக விதிகளுக்கு மாறாக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி, சந்திரன்பாபு, இஸ்மாயில் ஆகிய இருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர். கல்யாணி மதிவாணன், பேராசிரியராக பணியாற்றாமல் இணை பேராசிரியராக மட்டுமே பணிபுரிந்ததால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கல்யாணி மதிவாணன் துணைவேந்தராக நியமிக்கப்பட்டது செல்லாது என நீதிபதிகள் அறிவித்தனர்.
ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்பதற்கான அடிப்படை தகுதி அவர் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் கல்யாணி மதிவாணன் சென்னை எத்திராஜ் கல்லூரியில் இணைப் பேராசிரியராகத்தான் பணியாற்றியுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி அவர் இணைப் பேராசிரியராகத்தான் பணியாற்றியுள்ளார் என்பதோடு அவருடைய ஊதிய விகிதப்பட்டியலும் பெறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அவர் மீது மதுரை காமராசர் பல்கலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் கே.வி.ஜெயராஜ் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ரிட் மனு (W.P.11350/2012) தாக்கல் செய்துள்ளார். கல்யாணி மதிவாணன் தனது பதில் மனுவில் அதனை மறுத்து தான் தகுதியின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாது அவர் மீது மேலும் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.இஸ்மாயில் மற்றும் சிங்கப்பூரைச் சார்ந்த பேராசிரியர் சந்திரன் பாபு ஆகியோரும் வழக்குத் தொடுத்தனர். இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து கல்யாணியின் பதவியை பறித்துள்ளது.
துணை வேந்தர் கல்யாணி மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மருமகள் ஆவார்.