போரூர் கட்டிட விபத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. தோண்டத்தோண்ட அழுகிய நிலையில் பிணங்களாக மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த மாதம் 28–ந் தேதி நடைபெற்ற கோர கட்டிட விபத்தில் நேற்று முன்தினம் இரவு வரை நடைபெற்ற மீட்பு பணிகளில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 27 பேர் உயிருடனும், 50 பேர் பிணங்களாகவும் மீட்கப்பட்ட நிலையில், 6–வது நாள் மீட்புபணிகள் நேற்று நடைபெற்றது.
நேற்று காலை 10 மணிக்கு ஒரு ஆண் பிணமும், 10.35 மணிக்கு ஒரு ஆண் பிணமும், 11.10 மணிக்கு ஒரு பெண் பிணமும், 11.45 மணிக்கு 16 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமும், 12.05 மணிக்கு ஒரு பெண் பிணமும், 1.35 மணிக்கு ஒரு பெண் பிணமும், 2.35 மணிக்கு ஒரு பெண் என 7 பிணங்கள் அழுகியநிலையில் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட உடல்கள் அனைத்து முகங்கள் சிதைந்து, உடல்கள் உருக்குலைந்து அடையாளம் காண முடியாத வகையில் இருந்தன. அந்த உடல்கள் அனைத்தும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்பு படைவீரர்கள், தீயணைப்பு படையினர், போலீஸ் கமோண்டோ படையினர், பொதுப்பணி துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
5–க்கும் மேற்பட்ட ராட்சத எந்திரங்களும் இடைவெளி இல்லாமல் மீட்புப் பணிகளை துரிதகதியில் மேற்கொண்டு வருகிறது. அகற்றப்படும் கட்டிட இடிபாடுகள் உடனுக்குடன் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
85 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், மீதமுள்ள கட்டிட இடிபாடுகளை அகற்றுவதற்கான 7–வது நாள் மீட்புபணிகள் தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அப்போது பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
மீட்கப்பட்ட உடல்களில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாமல் இருந்து வரும் வேளையில், பலர் தங்கள் உறவினர்களை தேடி கட்டிட விபத்து பகுதியில் முகாமிட்டு உள்ளனர்.
மீட்புப் பணி குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழு கமாண்டன்ட் எம்.கே.வர்மா, டி.ஐ.ஜி. எஸ்.பி. செல்வன் ஆகியோர் அளித்த பேட்டி:
மீட்புப் பணியில் விஞ்ஞானப் பூர்வமாக ஈடுபட்டு வருகிறோம். இதுவரை எங்களது படைப் பிரிவு இப்படியொரு, கட்டட இடிபாட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டதில்லை. ஆனால், கட்டட இடிபாடுகளிடையே மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு எங்களது வீரர்களுக்கு அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் கிட்டத்தட்ட 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வெள்ளிக்கிழமைக்குள் மீட்புப் பணிகள் நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கிறோம். பணியை விரைவாக நிறைவு செய்வதற்கு, எங்களது மீட்புப் படையினர், முழு அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.