தென் கொரியாவின் இன்சியானில் வெள்ளிக்கிழமை 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளன. முதல் நாளான வெள்ளிக்கிழமை இரவு தொடக்க விழா நடைபெறவுள்ளது.
கிளாஸ்கோவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் வென்ற பதக்கங்களை (64) விட, இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வென்று தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையில் காமன்வெல்த்தை விட ஆசியப் போட்டிகளில் பதக்கம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. சீனா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் பதக்க வேட்டைக்குத் தடையாக இருக்கும்.
சீனாவின் குவாங்சூ நகரில் 2010-இல் நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் இந்தியா 14 தங்கம் உள்பட 65 பதக்கங்களை வென்று, ஆறாவது இடம் பிடித்தது. இதுவே, ஆசியப் போட்டிகளில் இந்தியாவின் மெச்சத்தகுந்த செயல்பாடு. ஆனால், போட்டியை நடத்திய சீனா 199 தங்கப் பதக்கங்களை அறுவடை செய்தது.
நீண்ட இழுபறிக்குப் பின் இந்திய ஒலிம்பிக் சங்கம் பரிந்துரைத்த 942 பேர் அடங்கிய பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் 679-ஆகக் குறைத்தது. இதனால், 516 வீரர், வீராங்கனைகள் மட்டுமே இன்சியானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இருப்பினும், இந்தியா இந்த முறை 70 பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய விளையாட்டு ஆணைய பொதுச் செயலாளர் ஜிஜி தாம்சன் கூறுகையில், “காமன்வெல்த்தில் 64 பதக்கங்கள் கிடைத்தது. இது திருப்தி அளிக்கும் செயல்பாடே. ஆசியப் போட்டிகளில் 70 பதக்கங்கள் வரை கிடைக்கும்’ என்றார்.
துப்பாக்கி சுடுதலில் 10 முதல் 14 பதக்கங்களும், தடகளத்தில் 12 முதல் 16 பதக்கங்களும் கிடைக்கும் என்பது சாய் அமைப்பின் எதிர்பார்ப்பு. குத்துச்சண்டை, பாட்மிண்டன், கபடி, மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் இருந்தும் கணிசமான அளவு பதக்கங்கள் கிடைக்கும்.
போட்டி நடக்கும் இடம் : இன்சியான், தென் கொரியா
பங்கேற்கும் நாடுகள் : 45
வீரர், வீராங்கனைகள் : 9,429
விளையாட்டு : 36 விளையாட்டுகள், 439 உட்பிரிவுகள்
தொடக்க விழா : செப்டம்பர் 19
நிறைவு விழா : அக்டோபர் 4