கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என அறிவித்த மத்திய அரசுக்கும், உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் உரிமம், பதிவு செய்யும் கால வரம்பை நீட்டித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சரக்கு சேவை வரிச் சட்டம் தொடர்பாக வணிகப் பிரதிநிதிகளுடன் மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும். அதேபோல், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி சுங்கச் சாவடிகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை ஓ.எம்.ஆர். சாலை, வேலூர், தருமபுரி, திருச்சியை அடுத்த சமயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் ஏ.எம்.விக்கிரமராஜா.