87-ஆவது ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு இந்தியா சார்பில் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள “லயர்ஸ் டைஸ்’ என்ற ஹிந்தித் திரைப்படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து டில்லியில், இந்தியத் திரைப்பட சம்மேளனத்தின் தலைமைச் செயலாளர் சுப்ரன் சென், பிடிஐ செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
2015-ஆம் ஆண்டுக்கான 87-ஆவது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த அயல்நாட்டுத் திரைப்படங்களுக்கான பிரிவில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் “லயர்ஸ் டைஸ்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நவாஸூதீன் சித்திக், கீதாஞ்சலி தாபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். “மேரி கோம்’ உள்பட 29 திரைப்படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு “லயர்ஸ் டைஸ்’ ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளது.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் டி.ஹரிஹரன் தலைமையிலான 12 பேர் கொண்ட குழு இந்தத் திரைப்படத்தைத் தேர்வு செய்துள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்ற 30 திரைப்படங்களில் “ஷாஹித்’, “குவீன்’, “மர்தானி’ ஆகிய ஹிந்தித் திரைப்படங்கள், “யெல்லோ’, “ஃபாண்ட்ரி’ ஆகிய மராத்திய மொழிப் படங்கள், வங்க மொழித் திரைப்படங்கள் “ஜதீஸ்வர்’, “அபூர் பாஞ்சாலி’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இந்த படத்தின் கதையானது, இந்திய-திபெத்திய எல்லைப்புற கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாய், காணாமல் போன தனது கணவனைத் தேடி தனது இளவயது மகளுடன் தில்லிக்குச் செல்கிறாள். வழியில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்வுப்பூர்வமாகக் கூறுவதே “லயர்ஸ் டைஸ்’ திரைப்படத்தின் கதை. இந்தப் படத்துக்காக நாயகி கீதாஞ்சலி தாபா, ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி (இயக்குநர் கீத்து மோகன்தாஸின் கணவர்) ஆகியோருக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது குறித்து படத்தின் இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறியதாவது:
“இந்தத் தகவல் தெரிந்ததுமே பரவசமாகிவிட்டேன். இந்தப் பரிந்துரையை, என் படத்துக்குக் கிடைத்த மணிமகுடமாகக் கருதுகிறேன். “லயர்ஸ் டைஸூ’க்குப் போட்டியாக விளங்கிய மற்ற 29 படங்களும் சிறந்தவைதான். இருப்பினும், எங்கள் படக்குழுவினரின் அயராத உழைப்புடன், சிறிது அதிர்ஷ்டமும் எங்களுக்கு இருந்ததால்தான் இது சாத்தியாமானதாகக் கருதுகிறேன். திரைப்படத்தின் கருவும் ஒரு காரணம் என்பதால் ஓர் இயக்குநரின் கடமையைத் திருப்தியுடன் நிறைவேற்றியுள்ளதாக நினைக்கிறேன்.
இனி, ஆஸ்கர் விருதைப் பெறுவதற்குத் தேவையான மக்கள் வரவேற்பை ஏற்படுத்தும் பணிகளை, படத்தைத் தயாரித்த ஜார் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் மேற்கொள்வர்’ என்றார் கீது மோகன்தாஸ்.
மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள கீது மோகன்தாஸ், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் தமிழில் உருவான “நள தமயந்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை இதுவரை இந்தியப் படங்கள் பெற்றதில்லை. இந்த விருதுக்கான இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற 5 படங்களின் வரிசையில் நடிகர் அமீர் கான் நடித்த “லகான்’ ஹிந்தித் திரைப்படம் இடம்பெற்றது. அதற்கு முன்னர், “மதர் இந்தியா’, “சலாம் பாம்பே’ ஆகிய இந்தியப் படங்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கான பட்டியலில் இடம்பெற்றன. இந்நிலையில், “லயர்ஸ் டைஸ்’ திரைப்படம் இந்தியத் திரைப்பட ரசிகர்களின் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.