இந்த வருடம் இரசாயனவியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொண்ட விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் எரிக் பெட்ஸிக் தலைமையிலான குழு ஒன்று அதிநவீன நுண்ணோக்கி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த நுண்ணோக்கியைப் பயன்படுத்தி உயிரணுக்களின் செயற்பாடுகளை வீடியோ போல படமெடுக்க முடியுமாம்.
வழக்கமான நுண்ணோக்கிகளைப் போல வெளிச்சத்தை மேலிருந்து பாய்ச்சாமல், பக்கவாட்டிலிருந்து மிக நுண்ணிய தட்டையாக பாய்ச்சி நுண்ணோக்கியால் பார்க்கும் தொழில்நுட்பமான சூப்பர் ரிசால்வ்ட் ஃப்ளூரசென்ஸ் மைக்ரோஸ்கோப்பி என்ற கண்டுபிடிப்புக்காக டாக்டர் எரிக்குக்கு நோபல் பரிசு கிடைத்தது.
இந்த வகையில் நுண்ணோக்கியால் பார்க்கும்போது இதுவரை தெரியாம இருந்த மிக நுண்ணிய பொருட்களும் மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தன.
ஆனால் அந்தக் கண்டுபிடிப்பால் மட்டும் திருப்தி அடைந்துவிடாமல் தான் ஏற்கனவே உருவாக்கியிருந்த பக்கவாட்டில் ஒளி பாய்ச்சுகின்ற தொழில்நுட்பத்திற்கு டாக்டர் எரிக் மேலும் மெருகூட்டினார் .
உயிரணுவின் குறிப்பிட்ட ஒரு பாகத்தில் பக்கவாட்டிலிருந்து தட்டையாக பாய்ச்சப்படுகின்ற ஒளியை மேலும் கீழும் வேகமாக நகர்த்துவதற்கான கருவி ஒன்றை அவரும் அவருடைய சகாக்களும் உருவாக்கினர்.
“அவ்வாறாக ஒளித் தட்டையை நகர்த்தி நுண்ணோக்கி வழியாக உயிரணுவைப் பார்க்கும்போது, அந்த கருவியின் வேகம், நுண்ணோக்கியின் வேகம் எல்லாம் அதிகமாக இருக்கும் என்றால், அந்த உயிரணுவின் செயற்பாடுகள் எல்லாம் ஒரு வீடியோ படம் போல தெளிவாகத் தெரிகின்றன” என அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள ஹோவர்ட் ஹியூஸ் மருத்துவ கழகத்தின் ஜெனீலியா ஆராய்ச்சிக் மையத்தைச் சேர்ந்த டாக்டர் எரிக் பிபிசியிடம் கூறியிருந்தார் .
உயிரோடுள்ள செல்களை எவ்வகையிலும் சேதப்படுத்தாமல் அதன் இயக்கத்தை துல்லியமாக படம்பிடிக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.
கருமுட்டை ஒன்று எப்படி வளர்கிறது, நரம்புகளுக்கும் மூளைகளுக்கும் இடையில் தகவல் எப்படிப் பரிமாறப்படுகிறது என்பது போன்ற உயிரணு செயற்பாடுகளை நாம் கண்கூடாகப் பார்க்க இந்தக் கண்டுபிடிப்பு வகைசெய்துள்ளது.
ஒரு உயிரணுவின் செயல்பாட்டை இப்படி நுணுக்கமாகப் பார்க்கும்போது, நம் கண்ணில் விரியும் காட்சிகள் பற்றி விளக்குகையில், “ஒரு சின்ன உயிரணுவுக்குள் பைத்தியம் பிடிக்கிற அளவுக்கு பரபரப்பான இயக்கம் இருப்பதை உங்களால் பார்க்க முடியும். ஒரு உயிரணுக்குள்ளே பத்தாயிரம் புரதங்கள் இருகின்றன அவை. லண்டனில் முக்கிய வீதியில் சாப்பாட்டு நேரத்தில் மக்கள் கூட்டம்போல ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிக்கொண்டு வேகமாக இயங்குவதை நாம் பார்க்க முடியும்.”என ஜெனீலியா ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் எரிக் பெட்ஸிக் தெரிவித்தார்.