திருச்சியில் இம்மாதம் 28-ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமது புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூரில் இன்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜி.கே வாசன் புதிய கட்சியில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸிலிருந்து விலகியுள்ள முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் புதுக்கட்சி தொடங்கியுள்ளார். புதுக் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாக காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு அணியிலும் உள்ள தனது ஆதரவாளர்களை திரட்டி வாசன் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
இதுவரை மாவட்ட தலைவர்கள் கூட்டம், இளைஞரணி, மாணவர் அணியினருக்கான ஆலோசனை கூட்டங்களை நடத்தி முடித்துள்ள வாசன் இன்று சென்னையில் மகளிரணியினருக்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். சென்னை – மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மகிளா காங்கிரஸ் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், “இளைஞர்கள், மகளிர், மாணவர்களுடைய உற்சாகத்தைப் பார்க்கும்போது நிச்சய்ம் நூற்றுக்கு நூறு வெற்றி இலக்கை அடைவோம். வருங்காலம் நம் கையில் உள்ளது என்பது உறுதி.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை வருங்காலத்தில் அமைப்பதற்கு சபதம் ஏற்போம். வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற கொள்கையின்படி நாம் உழைப்போம்.
இந்த நோக்கத்துக்காக, புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக இம்மாதம் 28-ஆம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நமது இயக்கத்தின் மூத்த தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள் உரை நிகழ்த்தவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்சியின் பெயர், புதிய இயக்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் எடுத்துரைக்கப்படும்.
காமராஜர் ஆட்சியில் 8 அமைச்சர்களில் இருவர் பெண்கள். அதேபோல் நமது கட்சியிலும் மகளிருக்கு உரிய முக்கியத்துவமும் பதவி பொறுப்புகளும் வழங்கப்படும்.
தமிழக அரசியல் வரலாற்றை மாற்றும் விதமாக, 48 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்கும் கூட்டமாகவே அது இருக்கும். திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நடைபெறும் இந்தப் பொதுக் கூட்டத்தை தமிழகம் மட்டுமல்ல; இந்தியாவே திரும்பிப் பார்க்கும் விதத்தில் அரசியல் திருப்புமுனை நிகழும்” என்றார் ஜி.கே.வாசன்.