மொபைலில் மாதாந்திர ரயில் சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் எடுக்கும் வசதி அடுத்த சில நாட்களில் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.
டில்லி பல்வால் புறநகர் ரயில் பிரிவில், செல்போனில் சாதாரண ரயில் டிக்கெட் பெறும் முறையை ரயில்வே துறை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
அடுத்த சில நாட்களில் சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளையும், பிளாட்பார டிக்கெட்டுகளையும் மொபைல் வழியாக பெறுகிற வசதி அறிமுகம் செய்யப்படும். தகவல் தொழில்நுட்பம் அடிப்படையிலான இந்த மொபைல் அப்ளிகேஷன் முறை காகித உற்பத்தியாளர்களுக்கு வருத்தத்தை தரலாம். ஆனால் நேரத்தை மிச்சப்படுத்துவதால் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். டிக்கெட் வழங்கும் எந்திரத்தில் ரொக்கம், ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி டிக்கெட் பெறுகிற வசதி டில்லியில் உள்ளது. பிற இடங்களிலும் இந்த முறை கொண்டு வரப்படும்.
இதன்மூலம் ரூ.5-க்கு அதிகமான பணத்தை செலுத்தி அல்லது ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி முன்பதிவில்லா பயண டிக்கெட்டுகளை பெற முடியும். இது, ரயில்நிலைய கவுன்ட்டர்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் இவ்வாறு அவர் கூறினார்.