வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது.
இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், “வங்கக்கடலின் மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் வலுவடையவில்லை. ஓரிரு தினங்களில் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலுவடைந்த பின்னரே எந்த திசை நோக்கி நகர்கிறது என்பதை வைத்து, தமிழகத்தில் மழை பெய்யுமா என்பதை சொல்ல முடியும்.
தொடக்க நிலையில் இருப்பதால் புயல் சின்னமாக உருவெடுக்குமா என்பதையும் தற்போது உறுதிப்படுத்த முடியாது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.