பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு 2 மணி நேரம் அதிகரிப்பட்டு, காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று, தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவை 2 மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு மணி நேரம் முன்னதாக, அதாவது காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறும். வடகிழக்கு மாநிலங்களில், காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.அதே நேரத்தில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே ஓட்டுப்பதிவு நடைபெறும். இதேபோல் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் குறிப்பிட்ட சில பாராளுமன்ற தொகுதிகளுக்கும் காலை 7 முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஓட்டுப்பதிவு 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டு இருப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் கமிஷன் அதன் இணைய தளத்தில் நேற்று வெளியிட்டு உள்ளது.
பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய சட்டசபைகளுக்கும் தமிழகம் உள்ளிட்ட சில மாநில சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கும் புதிய ஓட்டுப்பதிவு நேரம் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.