நான்கு அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை (கோஷா மருத்துவமனை) உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார். உணவு வகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றின் சுவையினை சோதித்து பார்த்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: “சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனைக்கு வந்து செல்லும் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “அம்மா உணவகத்தை” தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

மேலும், இந்த விழாவில் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் அவர் திறந்து வைத்தார்.

சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் “அம்மா உணவகங்கள்” கடந்த 2013-ம் ஆண்டு முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டன.

அரசு பொது மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக 20.11.2013 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும், இரண்டாம் கட்டமாக 21.2.2014 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகங்களிலும் அம்மா உணவகங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் இங்கு அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் வெளிநோயாளிகளும், உள்நோயாளிகளோடு உடனிருப்பவர்களும் உணவு வகைகளை உட்கொள்வதால் அவற்றை மிகுந்த கவனத்துடன் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரித்து வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

இவ்வாறு ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரும் பயனளிக்கும் அம்மா உணவகங்களின் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், திங்கள்கிழமையன்று 4 அரசு மருத்துவமனைகளில் “அம்மா உணவகத்தை” முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்து, பொது மக்களுக்கு உணவு வழங்கி விற்பனையைத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *