சென்னையில் மாற்று இதயத்துடன் உயிரைக் காக்க அதிவேகப் பயணம் – பரப்பான அந்த 13 நிமிடங்கள்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட தமிழக இளைஞரின் 6 உடல் உறுப்புகள், சென்னையில் இதயக்கோளாறால் சிகிச்சை பெற்றுவரும் மும்பை இளம்பெண் உள்பட பல்வேறு நபர்களுக்கு பொருத்துவதற்காக அறுவை சிகிச்சை மூலம் திங்கள்கிழமை மாலை அகற்றப்பட்டது.

இதில் இதயம் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு, அடையாறு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ள இளம்பெண்ணுக்கு பொருத்து வதற்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. போலீஸ் ஒத்துழைப்புடன் 11 சிக்னல்கள், 6 வேக தடைகளை தாண்டி, 11 கி.மீ. தூரத்தை 13 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் கடந்தது.

chennai-2

மூளைச்சாவு 

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பழையனூரை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. கிராம சுகாதார செவிலியராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகநாதன் (வயது 27). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடிவந்தார். வேலை கிடைக்கும் வரை வருமானத்திற்காக டிரைவர் (driver)வேலை செய்துவந்தார்.கடந்த 11-ந் தேதி லோகநாதன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பட்டாளம் என்ற பகுதியில் டேங்கர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று காலை 6.55 மணிக்கு லோகநாதன் மூளைச்சாவு அடைந்தார்.

உறுப்புகள் தானம்

இதனையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்ய முடிவெடுத்தனர். மும்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற கப்பல் என்ஜினீயர் அஸ்பி வினோகர் நேம்ஜி என்பவரின் மகள் ஹவோபியா (21) சில ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப்பட்டு அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஹவோபியாவிற்கு இருதய தானம் பெறுவதற்காக அவருடைய குடும்பத்தினர் எதிர்நோக்கியிருந்தனர்.லோகநாதனின் இருதயத்தை ஹவோபியாவிற்கு வழங்க முடிவானது.

இருதயத்தை விரைவாக கொண்டு செல்வது குறித்து டாக்டர்கள் போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் நேற்று மதியம் 2 மணிக்கு லோகநாதனின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனையில் பிரித்து எடுக்கப்பட்டது. இதில் 20 டாக்டர்கள் ஈடுபட்டனர். மாலை 5.35 மணி அளவில் லோகநாதனின் உடலில் இருந்து இருதயம் பிரித்தெடுக்கப்பட்டது.

13 நிமிடத்தில் பறந்தது

மாலை 5.45 மணி அளவில் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து மின்னல் வேகத்தில் இருதயம் ஆம்புலன்சு மூலம் அடையாறு மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ‘சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில் வழியெங்கும் போக்குவரத்து போலீசார் நின்று வயர்லெஸ் மூலம் போக்குவரத்தை சீர்படுத்தினர். ஆம்புலன்சு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சரியாக 13 நிமிடம் 22 வினாடிகளில் மலர் மருத்துவமனையை அடைந்தது.

அங்கு டாக்டர்கள் குழுவினர் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் ஹவோபியாவிற்கு பொருத்தினர்.மற்ற உறுப்புகளும் தானம்லோகநாதனின் 2 கண்கள் எழும்பூர் கண் மருத்துவமனைக்கும், 2 சிறுநீரகங்கள் அடையாறு மலர் மருத்துவமனைக்கும், கல்லீரல் வேலூர் அரசு மருத்துவமனைக்கும், தோல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரைட் மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டது. லோகநாதன் உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மீண்டும் மறுவாழ்வு பெற முடியும்.

லோகநாதனின் தாயார் ராஜலெட்சுமி கண்ணீருடன் கூறும்போது, ‘‘என் மகனை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறியதும் இடி விழுந்தது போல் இருந்தது. அவன் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் அவனை நேரில் காணமுடியும் என்று கருதினேன். எனவே அவனது உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு முன்வந்தேன். என்னுடைய மகன் உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் உயிர்வாழ வேண்டும்’’ என்றார்.

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *