ஜெர்மனி, அர்ஜென்டீனாவை வீழ்த்தி கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது

கூடுதல் நேர ஆட்டத்தில் அர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த ஜெர்மனியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த வலுவான அர்ஜென்டீனாவும் மோதின.

கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பை கால்பந்து வரலாறு ஒன்றை மாற்றி எழுதியது ஜெர்மனி. தென் அமெரிக்க கண்டத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அக்கண்டத்தைச் சேர்ந்த (உருகுவே இருமுறை, பிரேசில், அர்ஜென்டீனா தலா ஒரு முறை) அணிகளே வாகை சூடியுள்ளன.

ஆனால் இந்த முறை ஜெர்மனி கோப்பையை வென்று அமெரிக்க கண்டத்தில் ஐரோப்பாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. அமெரிக்க கண்டத்தில் அக்கண்ட அணிகள்தான் வெற்றி பெற முடியும் என்ற வரலாற்றை ஜெர்மனி மாற்றியிருக்கிறது.

பரபரப்பான 90 நிமிட நேர ஆட்டத்தில் கோல்கள் எதுவும் விழாததால், ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் மாறி மாறி செய்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.

பிறகு, கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியில், 113-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் சுயர்லி, இடப்புறமாக பாதி மைதானத்தில் இருந்து பந்தை படுவேகமாக கடத்தி வந்து, அங்கிருந்து கோல் போஸ்ட் அருகே நின்றிருந்த மாரியோ கோட்ஸே-க்கு பாஸ் செய்ய, அவர் அதை அருமையாக தன் நெஞ்சில் தடுத்து, பந்து கீழே இறங்கியவுடன் இடது காலால் அற்புதமான கோலை அடித்தார். அதிர்ச்சியடைந்தது அர்ஜென்டீனா.

அதன்பிறகு, மீதமிருந்த 7 நிமிட நேர ஆட்டத்தில், அர்ஜென்டீனா ஓரிரு முறை ஜெர்மனியின் கோல் பகுதிக்குச் சென்றது. ஆனால், ஜெர்மனியின் தடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, அரண் போல் நின்று அர்ஜென்டீனாவின் முயற்சிகளை முறியடித்து,

மெஸ்ஸி தனது தலைமையின் கீழ் உலகக் கோப்பையை வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த அர்ஜென்டீனா ரசிகர்களுக்கு, அவரது ஆட்டம் கூட திருப்தியளிப்பதாக இல்லை.

120 நிமிட நேர ஆட்டத்தை, நான்கைந்து முறை அவர் பந்தை எடுத்துச் சென்றார். கடைசியில், ஆட்டம் முடியும் தருவாயில் ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. அந்த ஃப்ரீ கிக்கை கோலாலாக மாற்றி நிச்சயம் சமன் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், அவரது ஷாட் கோல் கம்பத்துக்கு மேலே சென்று, அர்ஜென்டீனா ரசிகர்களின் கண்ணீருக்குக் காரணமானது.

ஜெர்மனி அணியின் தற்போதைய வீரர்களில் பெரும்பாலானோர் தங்கள் அணி கடைசியாக (1990) உலகக் கோப்பையை வென்றபோது குழந்தைகளாக இருந்துள்ளனர். மிரோஸ்லாவ் க்ளோஸ் (12 வயது) உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே உலகக் கோப்பையை வென்றபோது ஓரளவுக்கு விவரம் தெரிந்தவர்கள். ஜெர்மனி இம்முறை உலகக் கோப்பை வெல்வதற்கான வெற்றி கோலை அடித்த கோட்ஸே அப்போது பிறக்கவே இல்லை.

அர்ஜென்டீனா – ஜெர்மனி அணிகள் இறுதிப் போட்டியில் மோதியது இது மூன்றாவது முறை. இதற்கு முன்னர் 1986, 1990 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதி ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 1986-ல் அர்ஜென்டீனாவும், 1990-ல் ஜெர்மனியும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *