ஐபிஎல் சூதாட்டம் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் என். ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 13 பேர் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் நியமித்திருந்த நீதிபதி முட்கல் தலைமையிலான குழு, தனது விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட உறையில் இன்று உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட நீதிபதி டி.எஸ்.தாகுர் தலைமையிலான அமர்வு, இது தொடர்பிலான விசாரணை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டங்களும் முறைகேடுகளும் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.
அந்த விசாரணையை தமது குழுவே செய்யும் என்று கடந்த மே மாதம் பிசிசிஐ அளித்த ஆலோசனையை ஏற்கமறுத்த உச்ச நீதிமன்றம், இந்த விசாரணையை மேற்கொள்ள நீதிபதி முட்கல் தலைமையிலான குழுவை நியமித்தது.
ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொண்ட நீதிபதி முட்கல் தலைமையிலான குழு தனது இடைக்கால அறிக்கையில், அப்போது பிசிசிஐயின் தலைவராகவும் தற்போது சர்வதேச கிரிகெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ள என்.ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 13 பேரின் பெயர்களை குறிப்பிட்டிருந்தது.
நீதிபதி முட்கல் தலைமையிலான குழு இந்த விசாரணையை விரிவாக மேற்கொள்வதை எதிர்த்து பிசிசிஐயும் அதன் முன்னாள் தலைவரான ஸ்ரீநிவாசனும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். விசாரணைகளை நடத்த புதிய குழுவொன்று அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்கமறுத்த உச்ச நீதிமன்றம், தில்லி, மும்பை மற்றும் சென்னை காவல் துறையினரின் உதவியுடன் நீதிபதி முட்கல் தலைமையிலான குழுவே இந்த விசாரணையை மேற்கொள்ளும் என்று தெரிவித்திருந்தது.
இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலியும் தமது குழுவில் கிரிக்கெட் விவகாரங்கள் தொடர்பிலான வல்லுனராக செயல்படுவார் என்று நீதிபதி முட்கல் கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தார்.
வழக்குரைஞர்கள் எல்.நாகேஸ்வர ராவ், நிலாய் தத்தா மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிபி மிஸ்ரா ஆகியோரும் இந்த முட்கல் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.