ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 6க்கு ஒத்திவைப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 6ம் தேதி வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை பெங்களுரு உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக்கால சிறப்பு அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், இன்று இந்த மனு தொடர்பில் விடுமுறைக்கால சிறப்பு அமர்வின் நீதிபதி ரத்னகலா முன்பாக ஆஜரானார்.

இந்த பிணை கோரும் மனு மீதான விசாரணையிலும் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் மட்டுமே வந்ததாகவும், ஆனால் கர்நாடக மாநில அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தனக்கு அளிக்கப்படவில்லை என்றும் வழக்கறிஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இன்று ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் ஆஜரானார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அரசு தரப்பில் அதிகாரபூர்வ பிரதிநிதித்துவம் தேவை என்பதை கருத்தில் கொண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக்கால சிறப்பு அமர்வு இந்த மனு மீதான விசாரணையை வரும் அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் சசிகலாவின் நெருங்கிய உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கடந்த சனிக்கிழமையன்று நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் ஜாமீன் மனுக்கள் நேற்று பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *