சன் குழுமம், சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான உரிமம் வழங்க இந்திய உள்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி மறுத்துள்ளது. இதற்கான தகவலை கடந்த 20ஆம் தேதி வெளியிட்டபோது, அன்றிலிருந்து 15 நாட்களுக்குள் தன் சேவைகளை நிறுத்திக் கொள்ளும்படி சன் குழுமத்துக்கு இந்திய அரசின் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து கல் கேபிள்ஸ் பிரைவேட் லிமிடேட் (Kal cables Pvt. Ltd.) என்கிற சன் குழுமத்தின் அங்கமாக உள்ள இந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நகரங்களுக்குமான மனுக்கள் இன்று தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், இந்திய உள்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இந்த விவகாரம் தொடர்பாக எந்தவிதாமான விளக்கமும் கோராமல் எதனால் உரிமம் வழங்குவதற்கு அனுமதி மறுத்துள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடைகோரியும் அந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று, இதுதொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம் முன்பாக நடைபெற்றது. அப்போது, சன் குழுமம் தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதி, மத்திய உள்துறை அமைச்சகம் சன் குழுமத்துக்கான உரிமத்தை மறுக்கும் உத்தரவை வெளியிடுவதற்கு முன்னர் சன் குழும நிறுவனத்திடம் இருந்து ஏன் விளக்கங்கள் கோரவில்லை என்று கேள்வி எழுப்பியதோடு, இந்த வழக்கின் விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.