“ஜன் தன்” வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் இன்று தொடக்கம்

ஏழைக் குடும்பங்களுக்கு தலா இரண்டு வங்கிக் கணக்குகள் தொடங்கும் “பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்) திட்டம்’ நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) தொடங்கப்படுகிறது.

இதனையொட்டி, டில்லியில் வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். அன்றைய தினம் சுமார் ஒரு கோடி ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழா நாளில் பிரதமர் ஆற்றும் உரையை 76 நகரங்களில் காணொலி மூலம் நேரலையாக ஒளிபரப்ப மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

வங்கிக் கணக்கு தொடங்கப்படுவதையொட்டி, “நோ யுவர் கஸ்டமர்’ எனப்படும் வாடிக்கையாளரின் விவரங்களை வங்கிகளின் பிரதிநிதிகள் ஏற்கெனவே கணக்குத் தொடங்க ஆர்வம் உள்ளவர்களிடம் சேகரித்துள்ளனர்.

அண்மையில் நடந்து முடிந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “சுமார் ஏழரை கோடி மக்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கும் வகையில், ஜன் தன் திட்டம் தொடங்கப்படும்’ என்று கூறினார்.

இத்திட்டத்தின்படி கணக்குத் தொடங்கும் வாடிக்கையாளருக்கு ஒரு வங்கிப்பற்று அட்டை (டெபிட் கார்டு), ரூ. 1 லட்சத்துக்கான காப்பீடு வசதி கிடைக்கும். திட்டம் தொடங்கப்பட்ட முதல் 100 நாள்களுக்குள் வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு ரூ.2 லட்சத்துக்கான விபத்து கால காப்பீடு வழங்கப்படும்.

இது தொடர்பான அறிவிப்பு முறைப்படி வியாழக்கிழமை நிகழ்வின்போது பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு உத்தரவு

பிரதமரின் ஏழைகளுக்கான வங்கிக் கணக்குத் திட்டத்தை (ஜன் தன் யோஜனா) தமிழகத்திலும் சிறப்பாகச் செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நிதித் துறைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார். காப்பீட்டுடன் ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தனது சுதந்திர தின உரையின்போது, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஆக. 28) அவர் தொடங்கி வைக்கிறார்.

இதைத் தமிழகத்திலும் சிறப்பாகச் செயல்படுத்த வசதியாக தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக, நிதித் துறைச் செயலாளர் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:

தேசிய ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் திட்ட இயக்குநர், பிரதமரின் ஏழைகளுக்கான வங்கிக் கணக்குத் திட்டத்துக்கும் இயக்குநராக இருப்பார். இந்தத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கும் அதே நேரத்தில் தமிழகத்திலும் மாவட்ட அளவில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. அப்போது, நபார்டு வங்கியின் அதிகாரிகள், அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், மாவட்ட அளவில் நடைபெறும் விழாவிலும் பங்கேற்க வேண்டும்.

ஏழைகளுக்கான வங்கிக் கணக்கு திட்டத்தைச் செயல்படுத்த, மாநில அளவில் வங்கியாளர் குழுவும் அந்தக் குழுவுக்கு ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து செயல்பட வசதியாக, மாநில அளவில் மூன்று மூத்த அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை திட்ட இயக்குநர் அமைப்பார். இதற்கான அதிகாரம் அவருக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், இந்தத் திட்டத்தை ஒருங்கிணைக்கவும், சிறந்த முறையில் செயல்படுத்தவும் வசதியாக மாநில அளவிலான அமலாக்கக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் ஊரக வளர்ச்சி – ஊராட்சித் துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏழைகளுக்கான வங்கிக் கணக்குத் திட்டத்தை அனைத்துத் தரப்பினரும் தெரிந்து கொள்ள வசதியாக, உள்ளூர் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளில் போதிய விளம்பரங்களைச் செய்வதற்கான ஒத்துழைப்புகளை மாநில அரசு அளிக்கும். மாநில கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் வங்கிகள், விவசாயிகளுக்காக கிசான் அட்டைகளையும் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நிதித் துறைச் செயலாளர் சண்முகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று திட்டம் தொடக்கம்:

ஏழைகளுக்கான வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம், சென்னையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. ராணி சீதை அரங்கில் மாலை 3.45 மணியளவில் நடைபெறும் விழாவில் ஆளுநர் கே.ரோசய்யா, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழக அரசு சார்பில் மூத்த அமைச்சர்களும் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

Check Also

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ வேண்டும்: சுஷ்மா சுவராஜ்

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர இடம் கிடைக்கும் வகையில் அந்த அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *