செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் நுழைந்த மங்கள்யான் விண்கலம் நேற்று தனது திரவ எரிபொருள் இன்ஜினை வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) சார்பில், கடந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம், கடந்த 300 நாள்களுக்கும் மேலாக விண்வெளியில் பறந்து செவ்வாய்க்கிரக ஈர்ப்பு விசைக்குள் சென்றது.
செப்டம்பர் 24-ஆம் தேதி காலை 7.17 மணி 32 நொடிக்கு 440 நியூட்டன் திரவ உச்சநிலை மோட்டார் இயக்கப்பட்டு செவ்வாய்க்கிரக சுற்று வட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலம் செலுத்தப்படும்.
இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டு, கடந்த 300 நாள்களுக்கும் மேலாக இயக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த திரவ உச்சநிலை மோட்டாரை சோதிக்கும் பணி திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள விண்வெளி தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
திரவ உச்சநிலை மோட்டார் 3.968 நொடிகள் மட்டும் இயக்கப்பட்டது. ஏற்கெனவே திட்டமிட்டபடி எந்தவித சிக்கலும் இல்லாமல் திரவ உச்சநிலை மோட்டார் இயங்கியதாக இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் பி.ஆர்.குருபிரசாத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மங்கள்யான் விண்கலத்தின் விசை வீச்சு வளைவு (டிராஜெக்டரி) முறைப்படி சரி செய்யப்பட்டது. செவ்வாய்க்கிரக சுற்று வட்டப் பாதையில் விண்கலம் சீராக செலுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிரகத்தின் ஈர்ப்பு விசை மண்டலம் 5.4 லட்சம் கி.மீ. அரை விட்டமாகும். நமது விஞ்ஞானிகளின் கணக்குப்படி, மங்கள்யான் விண்கலம், செவ்வாய்க்கிரக ஈர்ப்பு விசை மண்டலத்தில் நுழைந்துள்ளது.
666 மில்லியன் கி.மீ. பயணமாகச் சென்றுள்ள மங்கள்யான் விண்கலம், கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி பூமியிலிருந்து விலகிச் சென்றது.
செப்டம்பர் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிரக சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை செலுத்தும் பொருட்டு, கிரகத்தின் வேகத்துக்கு பொருத்தமாக விண்கலத்தின் வேகத்தை நொடிக்கு 22.1 கிலோ மீட்டரில் இருந்து நொடிக்கு 4.4 கிலோ மீட்டராகக் குறைக்கப்படும். அதன்பிறகு 24 மணி நேரத்துக்கு திரவ உச்சநிலை மோட்டார் இயக்கப்பட்டு, மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்படும். இதைச் செயல்படுத்துவதற்கான கட்டளைகளை ஏற்கெனவே அனுப்பி வைத்துள்ளோம். அதன்படி, அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும்.
இதன்மூலம், முதல் முயற்சியில் செவ்வாய்க்கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தைச் செலுத்திய நாடாக இந்தியா உயரும் என்றார் அவர்.
பிரதமர் மோடி வருகிறார்:
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை நாளை அடைந்ததும் காலை 8 மணியில் இருந்து 8.15 மணிக்குள் தகவல்களை அளிக்கத் தொடங்கும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை நேரடியாக காண பெங்களூர் இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.