சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்தது.
கடந்த 28-ம் தேதி மாலை மவுலிவாக்கத்தில் 11 அடுக்க மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. தொடர்ந்து 6-வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) மதியம் வரை ஒரு குழந்தை உள்பட 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
இடிபாடுகளில் 72 பேர் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை சடலமாகவும் உயிருடனும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80- க்கும் மேலாக அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அரசு வருவாய் துறை மூத்த அதிகாரி ஒருவர், இன்னும் 25 முதல் 30 பேர் வரை இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்றார்.
இடிந்து விழுந்த கட்டிடத்தில் மொத்தம் 72 தொழிலாளர்கள் சிக்கியிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை 58 பேர் சடலமாகவும், 27 பேர் உயிருடனும் என மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணி இன்னும் முடிவடையாததால் மேலும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என தெரியாமல் மீட்புக் குழுவினரும், அரசு அதிகாரிகளும் குழப்பமடைந்துள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் தொழிலாளர்கள் சிலர் குடும்பத்துடன் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. குழந்தைகளும் உடன் இருந்ததாக கூறுகின்றனர். சனிக்கிழமை வேலைக்கு வராதவர்களும் மாலையில் சம்பளம் வாங்குவதற்காக வந்துள்ளனர். மழை பெய்ததால், அனைவரும் கட்டிடத்துக்குள் சென்று நின்றுள்ளனர். அதனால், கட்டிட இடிபாடுகளில் சுமார் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அண்ணனை காணவில்லை, தம்பியைக் காணவில்லை, கணவரை காணவில்லை என பலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதனால், இன்னும் 30-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.
மீட்புப் பணி முடிவது எப்போது?
மவுலிவாக்கம் கட்டிட விபத்து மீட்புப் பணிகள் இன்னும் 2 நாட்களில் முடியும் என்று டிஐஜி தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு டிஐஜி செல்வம் கூறுகையில், “இடிந்து விழுந்த கட்டிடத்தில் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 நாட்களில் இப்பணிகள் முடிவடையும்” என்றார்.
விசாரணை ஆணையம்
மவுலிவாக்கம் சம்பவம் நடைபெற்றதற்கான காரணம் குறித்தும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவும், நீதிபதி சு.ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மவுலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் 28.6.2014 அன்று மாலை இடிந்து விழுந்ததையடுத்து, இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பணிகளும், காயமடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 27 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் 55 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாயும், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டதோடு, உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாடு அரசு செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு செலவில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதோடு, அவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
கட்டடம் இடிந்து விழுந்த இடத்தை 29.6.2014 அன்று நேரில் பார்வையிட்டு, இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.
மேலும், இந்தத் துயரச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறி, நிவாரண உதவியினையும் நான் வழங்கினேன்.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றதற்கான காரணம் குறித்தும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவும், ஓய்வு பெற்ற நீதிபதி சு. ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தினை அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விசாரணை ஆணையம்,
1. 28.6.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததன் விளைவாக 55 பேர் உயிரிழந்தது மற்றும் பலர் படுகாயமடைந்த துயரச் சம்பவத்திற்கு காரணமான அனைத்து அம்சங்கள் மற்றும் சூழ்நிலைகள்
2. பல கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழப்பதற்கும், படுகாயம் அடைந்ததற்கும் காரணமான இந்தத் துயரச் சம்பவம் யாருடைய அலட்சியப் போக்கினால் நடந்தது என்பதை கண்டறிந்து, அதற்கு பொறுப்பானவர்களை முடிவு செய்தல்
3. இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையில், கடைபிடிக்க வேண்டிய தீர்வு முறைகளை பரிந்துரை செய்தல்
ஆகியவற்றை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையினை அளிக்கும். விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு மேல் நடவடிக்கைகளை எடுக்கும்”. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.