பிரபல ரவுடியின் அருகில் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அருகில் பிரபல ரவுடி இருப்பது போன்ற ஒரு படம் இணையதளங்களில் உலா வருகிறது. இது பற்றி ஒரு இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில்,
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், வரிச்சூர் செல்வத்தின் மீது பல்வேறு கொலை, ஆட்கடத்தல், கொலை முயற்சி வழக்குகள் உள்ளன, பலமுறை சிறை சென்ற இந்த ரவுடி மீது ஒரு முறை போலிஸ் என்கவுண்டர் போட்டது, அதில் வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளி போலிசால் சுடப்பட்டு சாக அதிஷ்டவசமாக அதில் தப்பிய வரிச்சூர் செல்வம் திருந்தி வாழ்வதாக கூறி கலெக்டர் ஆர்டிஓ மற்றும் மாஜிஸ்ட்ரேட்டிடம் மனு கொடுத்து தப்பித்தார், கொஞ்சம் நாட்கள் அமைதியாக இருந்தவர் மீண்டும் ரவுடித்தனம் செய்ய ஆரம்பித்தார்.
இந்நிலையில் காலையில் ரவுடி வரிச்சூர் செல்வத்துடன் முன்னாள் குடியரசுத்தலைவரும் எளிமையான தலைவருமான ஏபிஜே அப்துல்கலாம் இருப்பது போன்ற படம் வெளியானது, இந்த படம் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் எடுக்கப்பட்டுள்ளது, ரவுடி வரிச்சூர் செல்வம் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் அருகில் போய் அமர்ந்து எடுத்துள்ளார் போல் உள்ளது.
வரிச்சூர் செல்வம் ஒரு பிரபல ரவுடி என்பதும் அவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன என்பதும் உன்னத தலைவரும் மனிதருமான அப்துல்கலாமுக்கு தெரிந்திருக்காது, எத்தனையோ பொதுமக்கள் அவருடன் படம் எடுத்ததை போல இவரும் ஒருவர் என்று நினைத்து படம் எடுக்க அனுமதி தந்திருப்பார்.
முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் சிறந்த மனிதர், பெரும் அறிவு ஜீவி, குடியரசுத்தலைவராக இருந்த போது கூட ஆடம்பரத்தையும் தேவையற்ற பாதுகாப்பையும் அறவே வெறுத்தவர். அவர் இந்த தேசத்திற்கு மிக முக்கியமானவர், அவர் இந்த தேசத்தின் கெளரவமும் கூட, அத்தனை சிறந்த மனிதர் அருகில் வரிச்சூர் செல்வம் போன்ற ரவுடிகள் நெருங்கி படம் எடுக்க அப்துல்கலாமின் பாதுகாவலர்கள் எப்படி அனுமதித்தார்கள்? அல்லது முன்னாள் குடியரசு தலைவர் அவர்களின் அருகில் பாதுகாவலர்களே இல்லையா? ஒரு வேளை அப்துல்கலாம் அவர்களே பாதுகாப்பு வேண்டாம் என்று சொல்லியிருந்தால் அவருக்கு எங்கள் கோரிக்கை, அப்துல்கலாம் அய்யா உங்கள் எளிமையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் ஏற்கிறோம், அதே சமயம் இந்த தேசத்தின் கவுரவமான உங்களின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம். தயவு செய்து பாதுகாவலர்கள் இல்லாமல் இருக்காதீர்கள்.
இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.