ஆசிரியர் தினத்தின் பெயரை மாற்ற அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு

ஆசிரியர் தினத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என பெயர் மாற்றம் செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆசிரியராக பணியைத் தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் நினைவைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஆசிரியர் தினத்தையொட்டி வரும் 5 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுடன் காணொலிக் கலந்தாய்வு முறையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிரதமர் ஒருவர் பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடுவது இதுவே முதல் முறையாகும். இந்த வகையில் மத்திய அரசின் முயற்சி வரவேற்கத்தக்கதாகும். அதே நேரத்தில் ஆசிரியர் தினம் என்ற பெயரை குரு உத்சவ் என மத்திய அரசு மாற்றியிருப்பது சரியல்ல. சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று பெயர் மாற்றம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

ஆசிரியர் தினத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, கல்லூரி பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் திகழ்ந்து, தந்துவ மேதையாக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்று அப்பதவிக்குப் பெருமை சேர்த்தார். செப்டம்பர் 5 ஆம் நாள் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர் தினம் அன்று பிரதமர் நரேந்திமோடி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்களிடம் இணையம் மூலம் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கதாகும். ஆனால், இந்நிகழ்ச்சியை வடிவமைத்துள்ள மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், ஆசிரியர் தினத்தின் பெயரை “குரு உத்சவ்” என்று பெயர் மாற்றிக் கொண்டாட அறிவிப்பு வெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.

பல்வேறு தேசிய இனங்களின் மொழி, இன, பண்பாட்டு அடையாளங்களைப் பேணி வளர்த்தால்தான் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெறும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

எனவே, மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆசிரியர் தினத்தை “குரு உத்சவ்” என்று பெயர் மாற்றம் செய்யும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

Check Also

மருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுகளில், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *