பிரதமர் மோடியின் ஆசிரியர் தின உரையை பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் உரையை நாடு முழுவதிலும் பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் பலவேறு நிகழ்ச்சிகளில் மாணவ மாணவியர்களிடம் உரையாற்றி வந்துள்ளார். எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய இவர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

நாட்டில் முதல் முறையாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்காகவும், அன்றைய தினம் பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் கலந்துரையாடவும் பல்வேறு மாநில அரசுகள் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதி, ஆசிரியர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 5ஆம் தேதி இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலுக்குத் தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக, ராஜஸ்தான், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் திட்டத்துக்கு மேற்கு வங்க மாநிலம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு, மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று அந்த மாநில அரசு கூறியுள்ளது.

இதேபோல், டில்லியில் உள்ள தனியார் பள்ளிகளும் இத்திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில், இந்தத் திட்டத்தால் ஆசிரியர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி பாதிக்கப்படும் என்று அவை கவலைப்படுகின்றன.

முன்னதாக, இந்தக் கலந்துரையாடல் தொடர்பான அறிவிக்கையை தில்லி மாநில அரசின் கல்வித் துறை இயக்குநரகம் அங்குள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தது.

அதில், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதியன்று மாலை 3 மணி முதல் 4.45 மணி வரை பிரதமரின் உரை மற்றும் பள்ளிக் குழந்தைகளுடனான கலந்துரையாடல் கேள்வி-பதில் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. “பிரதமரின் உரையை நாடு முழுவதிலும் உள்ள குழந்தைகள் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்ப்பதற்காக அனைத்துப் பள்ளிகளும் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’ என்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் உத்தரவைத் தொடர்ந்து, தில்லி மாநில அரசின் கல்வித் துறை இயக்குநரகம் மேற்கண்ட அறிவிக்கையை அனுப்பியிருந்தது.

அதில், “இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஏதாவது அலட்சியமோ, குறைபாடோ காணப்பட்டால், அது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும்’ என்று தெளிவாக எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Check Also

கல்வி கட்டணம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு…

பாசமிகு பள்ளி தாளாளர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *