தமிழக முதல்வராகப் பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம், திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அவர் ஏற்கெனவே வகித்த நிதி, பொதுப் பணித் துறைகளுடன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகித்த துறைகளும் அளிக்கப்பட்டுள்ளன. மற்ற அமைச்சர்களுக்கு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அளிக்கப்பட்ட அதே பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், 30 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்ச்சி, ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பிற்பகல் 1.23 மணிக்குத் தொடங்கிய பதவியேற்பு நிகழ்ச்சி, பிற்பகல் 2.25 மணியளவில் நிறைவடைந்தது. முதல்வர், அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக, ஆளுநர் கே.ரோசய்யா பிற்பகல் 1.15 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற்ற தர்பார் மண்டபத்துக்கு வந்தார். அவரை ஓ.பன்னீர்செல்வம் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றார். தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், பொதுத் துறைச் செயலாளர் யதேந்திர நாத் ஸ்வைன் உள்ளிட்டோரும் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கண்ணீர் மல்க பதவியேற்பு:

முதலாவதாக, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அப்போது, பதவியேற்பு வாசகங்களைப் படித்துக் கொண்டிருந்த அவர், கண்ணீர் சிந்தத் தொடங்கினார். கண்களைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு பின்னர் பதவியேற்றுக் கொண்டார். அதன்பிறகு, அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, பி.மோகன் என ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த 30 பேரும், ஒருவர் பின் ஒருவராகப் பதவியேற்றுக் கொண்டனர். அனைவருக்கும் ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்வு முடிந்ததும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அனைத்து அமைச்சர்களும் தலைமைச் செயலகம் விரைந்தனர்.

பிற்பகல் 3.15 மணியளவில் அனைவரும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறையில் கூடினர். அவருடன் சில நிமிஷங்கள் ஆலோசனை நடத்தினர். பிற்பகல் 3.45 மணிக்கு மேல் அமைச்சர்கள் அனைவரும் அவரது அறையில் இருந்து வெளியே வந்தனர்.  அனைவரும் தங்களது பழைய அறைகளுக்கே சென்றனர். யாருக்கும் அறைகள் மாற்றப்படவில்லை. ஒரு சில கோப்புகளைப் படித்து அதில் கையெழுத்திட்டு தங்களது அரசுப் பணிகளைத் தொடங்கினர்.

முதல்வர் அறை எங்கே? நிதி, பொதுப் பணித் துறை அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தபோது, அவருக்கு தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. முதல்வ ராகப் பொறுப்பேற்ற பிறகும் அவர் அதே அறையைப் பயன்படுத்த விரும்புவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் மாளிகையில் இருந்து முதல்வராகப் பதவியேற்ற உடனேயே தனது பழைய அறைக்கே பன்னீர்செல்வம் வந்தார். அங்கு அமர்ந்தே, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலாளர்கள், டிஜிபி ராமானுஜம், ஏடிஜிபி (சட்டம்-ஒழுங்கு) டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Check Also

சென்னை மாநகராட்சி 86 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பட்டப்பகலில் படுகொலை

சென்னை மாநகராட்சி 86 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திரு. எம். குரு. அவர் இன்று மதியம் 1 மணியளவில் அம்பத்தூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *