மா. சிங்காரவேலர் அவர்கள் சிலை திறப்பு விழா – மாண்புமிகு மத்திய கப்பல்துறை அமைச்சர் திரு. ஜிகே. வாசன் அவர்கள் 15-02-2014 அன்று திறந்து வைத்து உறையாற்றினார்.

சிந்தனைச் சிற்பி மா. சிங்காரவேலர் அவர்களின் திருவுருவச் சிலையை, சென்னை மீன்பிடித் துறைமுக நிர்வாக அலுவலக வளாகத்தில் மாண்புமிகு மத்திய கப்பல்துறை அமைச்சர் திரு. ஜிகே. வாசன் அவர்கள் 15-02-2014 அன்று திறந்து வைத்து உறையாற்றினார்.

அவர் கூறியதாவது, 1860 ம் ஆண்டு, பிப்ரவரி 18 ம் தேதி பிறந்த திரு. சிங்காரவேலர், இந்தியாவில் உள்ள தொழிலாளர்களின் உரிமைக்காக, முக்கியமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை உயர போராடியவர்.

பிரிட்டிஷ் இந்தியா காலத்திலேயே மா. சிங்காரவேலர் ஒரு மேதையாக போற்றப்பட்டார். இவர் வணிகம் மற்றும் பொது உடைமைகளில் பெறும் நாட்டம்  கொண்டவராவார். இவர் 20,000 புத்தகங்களை கொண்ட ஒரு நூலகத்தையே வைத்திருந்தவர்.

சாதி, மத பேதங்களை அறவே வெறுத்த மா. சிங்காரவேலர் அவைகளைக் கலைந்து, மக்கள் ஒன்றுபட்டிருக்க போராடியவர். இதற்காகவே பொதுவாழ்க்கையை தேர்ந்தெடுத்து மக்கள் தொண்டாற்றி மக்களின் பேராதரவைப் பெற்றவர்.

இத்தகைய புகழ்பெற்ற மா. சிங்காரவேலர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸின் தொண்டர்படைத் தளபதியாகவும் செயல்பட்டவர். காங்கிரஸின் ஒரு பகுதியாக தொழிலாளர் மற்றும்  விவசாயி சங்கங்களை உருவாக்கப் பாடுபட்டவர். மா. சிங்காரவேலர் அவர்கள் சென்னையில் வேல்ஸ் இளவரசர் புறக்கணிப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்.

1922 கயா காங்கிரஸிற்கு சுப்பிரமணிய சிவாவுடன் சென்று கலந்து கொண்டு இந்தியாவிற்கு தேவை பூர்ண சுயராஜ்யமென முழங்கினார். 1923 ல் இந்தியாவிற்கு முதன் முதலில் தொழிலாளர் தினமான மே தினத்தைக் கொண்டாடியவர். அந்தக் காலக்கட்டத்திலேயே அவர் “காம்ரேட்” என அழைக்கப்பட்டார். மேலும், லெனின் அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு லெனின் அவர்களால் இந்தியாவின் ‘கிழச்சிங்கம்’ என அழைக்கப் பட்டவர்.

ஆங்கிலம், தெலுங்கு, பிரஞ்ச், தமிழ் என பன்மொழிகளில் புலமை பெற்றவர் சிங்காரவேலர். மண்டையம் திருமலாச்சாரி, இராஜமகேந்திர பிரதாப், எம்.என்.ராய் போன்றோர் வாயிலாக ரஷ்யாவின் ஹிந்து, நவசக்தி போன்ற பத்திரிக்கைகளில் புத்துணர்வுக் கருத்துக்களை எழுதியவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி இயக்கமான இந்துஸ்தான் லேபர் கிஸான் என்ற அரசியல் கட்சியையும், ‘இந்துஸ்தான் லேபர் கிஸான்’ என்ற பத்திரிக்கையுடன் ‘தொழிலாளன்’ என்ற தமிழ் பத்திரிக்கயையும் வெளியிட்டார்.

கர்ம வீரர் காமராசர் முதலமைச்சராக இருந்த பொழுது எழை, எளிய மாணவர்கள் கல்வியில் சிறக்க மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தியது நினைவிருக்கும். அதன் முன்னோடியாக சிங்காரவேலர் நகரசபை உறுப்பினராக இருந்த பொழுது , ஏழை குழந்தைகளுக்காக மதிய உணவு வழங்கிட ஆலோசனை வழங்கியதே இதற்கு முன்னோடியாகும். தனது வாழ்நாள் முழுவதும் சுதந்திர போராட்டம், சமூக விடுதலை, சமதர்மம், தொழிலாளர் பாதுகாப்பு, தொழிற்சங்க வளர்ச்சி ஆகியவற்றிற்காக போராடியவர்.

இறுதியாக மாண்புமிகு மத்திய கப்பல்துறை அமைச்சர் திரு. ஜிகே. வாசன் அவர்கள், சிங்காரவேலரின் சிலையை திறந்து வைப்பதின் மூலம் அவர் விட்டுச் சென்ற தர்ம நியாயங்கள், கொள்கைகள், தன்னலமற்ற சேவைகளை நம் நினைவில் நிறுத்தி என்றென்றும் பின்பற்றி வாழ வழி வகுக்கும் என்றார்.

இவ்விழாவில் மீனவர்களின் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். சென்னை துறைமுகத்தின் தலைவர் திரு. அதுல்ய மிஸ்ரா வரவேற்புரை ஆற்றினார். துணைத்தலைவர் திரு. பரிதா நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *