ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு, 1.11.2014 முதல் அமல்: தமிழக அரசு

ஆவின் நிறுவனத்தின் சமன்படுத்திய பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,

தி.மு.க. ஆட்சியின் போது, ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாட்கள் கழித்து கூட பணம் அளிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், தனது கொள்முதலையே குறைத்துக் கொள்ளும் அவல நிலைக்கு ஆவின் நிறுவனம் தள்ளப்பட்டது. இப்படி தள்ளாடிக் கொண்டிருந்த ஆவின் நிறுவனத்தை மீட்டெடுக்க, கிட்டத்தட்ட 6 மாதம் வரையில் மாதா மாதம் 17 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்கி அதனை ஒரு ஸ்திரத் தன்மைக்கு தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

இதுவரை, 192 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி உதவி தமிழ்நாடு அரசால் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று சென்ற ஆண்டு ஆவின் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்த போது, அதனை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் என 1.1.2014 முதல் உயர்த்தி வழங்கியது. அதே சமயத்தில் பாலின் விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில், கறவை மாடுகளின் விலை, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை, இதர இடுபொருட்களின் விலை ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளன என்று தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை பால் உற்பத்தியாளர்கள் வைத்துள்ளனர்.

பால் விற்பனை, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதினையும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும், தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதையும் கருத்தில் கொண்டு; கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 22.5 லட்சத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையிலும், பால் கூட்டுறவு சங்கங்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையிலும், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 23 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தவும்; எருமை பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 31 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக, அதாவது 4 ரூபாய் உயர்த்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த பால்  கொள்முதல் விலை உயர்வு 1.11.2014 முதல் அமலுக்கு வரும். விற்பனை விலையை பொறுத்தவரையில், தனியார் பால்பண்ணை மற்றும் இதர மாநில கூட்டுறவு இணையங்களின் பால் விற்பனை விலையோடு ஆவின் பால் விற்பனை விலையை ஒப்பிடும் போது, ஆவின் பால் விற்பனை விலை மிகவும் குறைவாகும்.

பொதுவாக, பால்பண்ணை தொழிலில் நுகர்வோர்களிடமிருந்து பெறப்படும் பால் விற்பனை தொகையில், 75 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், கூட்டுறவு நிறுவனங்களின் பொருளாதார நிலை மற்றும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பால் பணப் பட்டுவாடா எவ்விதத்திலும் பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும், அதே சமயத்தில் நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.

எனவே, பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பதப்படுத்தும் செலவுகளை ஈடு செய்ய, சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 24 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. இந்த விலை உயர்வுக்கு பிறகும் கூட, ஆவின் பால் விற்பனை விலை, தனியார் பால் பண்ணைகள் மற்றும் இதர மாநில கூட்டுறவு இணையங்கள் பால் விற்பனை விலையை விட குறைவானதே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஒரு வருட ஊரடங்கு போட்டாலும் கவலை இல்லை! ஒரு பத்திரிக்கையாளரின் மனக்குமுறல்…

தலைநகர் சென்னையில் வசித்து வரும் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் கிங் மேக்கர் செல்வம் சிறு ஆதங்கம். கொரோனா நோயினால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *