டெண்டுல்கர் புகார், கிரேக் சேப்பல் மறுப்பு

ராகுல் திராவிடுக்கு பதிலாகத் தன்னை கேப்டனாக இருக்குமாறு 2007 உலகக் கோப்பை போட்டிக்கு முன் அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கேட்டுக் கொண்டார் என்று டெண்டுல்கர் தெரிவித்த கருத்துக்கு சேப்பல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

“பிளேயிங் இட் மை வே’ என்ற சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதைப் புத்தகம் வியாழக்கிழமை வெளியாக உள்ளது. 2005 முதல் 2007 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரேக் சேப்பல் குறித்து அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சச்சின் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக கிரேக் சேப்பல் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வார்த்தைப் போரில் ஈடுபட நான் விரும்பவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளராக நான் பணியாற்றிய காலகட்டத்தில் திராவிடுக்கு பதிலாக சச்சின் கேப்டனாக இருக்க வேண்டும் என்ற யோசனையே எழவில்லை. எனவே, சச்சின் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள புகார்கள் ஆச்சரியம் அளிப்பவையாக உள்ளன.

நான் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் ஒரே ஒரு முறைதான் சச்சின் வீட்டுக்குச் சென்றுள்ளேன்.

அதுவும் அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதற்கு சுமார் 12 மாதங்களுக்கு முன், அவர் காயத்திலிருந்து குணமடைந்து வந்த வேளையில், துணைப் பயிற்சியாளர், உடலியக்க நிபுணர் ஆகியோருடன் சச்சின் வீட்டுக்குச் சென்றேன். அவரது வீட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கேப்டன் பொறுப்பு குறித்து விவாதமே செய்யப்படவில்லை என்று சேப்பல் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டை சீரழித்தார்

இந்திய கிரிக்கெட்டை தாற்காலிகமாக கிரேக் சேப்பல் சீரழித்தார் என்று சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறினார்.

சேப்பல் மீதான சச்சின் புகாருக்கு வலுசேர்க்கும் வகையில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:

சேப்பலின் சீரழிவு நடவடிக்கைகளை சரி செய்ய குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பிடித்தன. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், அப்போது அணியில் இடம்பெற்றிருந்த சில வீரர்கள் அவருக்கு தவறான தகவல்களை அளித்தனர். இது வீரர்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தியது.

இந்திய அணிக்கு எவ்வளவு கெடுதல் ஆகும் என்பது பற்றி சிந்திக்காமல், கண்மூடித்தனமாக சேப்பலை பின்பற்றினால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று சில வீரர்கள் கருதினர்.

தகுந்த நேரம் வரும்போது, அந்த வீரர்களின் பெயர்களை வெளியிடுவேன். ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரின்போது, கங்குலி கஷ்டப்பட்டு களத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு எதிராக இ-மெயிலை சேப்பல் அனுப்பிக் கொண்டிருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்ததால் இதுபற்றி எனக்குத் தெரிந்தது.

7 பேரை அணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று சேப்பல் துடித்தார். அதில் முக்கியமானவர் கேப்டன் செüரவ் கங்குலி. அதன் பின்னர் நான் (ஹர்பஜன்), வீரேந்திர சேவாக், ஆஷிஷ் நெஹ்ரா, ஜாகீர் கான், யுவராஜ் சிங் உள்ளிட்டோர் அவரது குறிகளாக இருந்தோம். இந்திய அணியை வெற்றிகரமாக ஆக்கிய செüரவ் கங்குலிக்கு ஆதரவாக நான் இருந்ததால் சேப்பல் என்னைக் குறிவைத்தார்.

அவர் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில், வீரர்கள் ஒருவரை ஒருவர் நம்ப முடியாத அளவுக்கு சூழ்நிலை நிலவியது. வீரர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக அவர் ஆக்கினார் என்றார் ஹர்பஜன்.

வி.வி.எஸ்.லட்சுமண்.

இந்திய அணியை பின்னுக்குத் தள்ளியவர் கிரேக் சேப்பல் என்றார் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

சச்சின் எழுதியுள்ளது அனைத்தும் உண்மை என்றே நம்புகிறேன். 2006இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குகிறீர்களா என என்னிடம் சேப்பல் கேட்டார். அதற்கு முன்னர் தொடக்க வீரராக நான் பிரகாசிக்கவில்லை என்பதால் நான் மறுத்தேன். அப்போது அவர் என்னிடம் உனக்கு என்ன வயது என்று கேட்டார். நான் 31 என்றேன். வீட்டில் அமர்வதற்கு 31 என்பது மிகவும் குறைந்த வயதல்லவா என்றார். அவரது கருத்தைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது நான் சிறப்பாக விளையாடி வந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

சேப்பல் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் வீரர்களிடையே இணக்கமான சூழ்நிலை இல்லை என்றார்.

கருத்து கூற திராவிட் மறுப்பு: சேப்பல் குறித்து சச்சின் கூறிய புகார் தொடர்பாக கருத்து கூற முன்னாள் வீரர் ராகுல் திராவிட் மறுத்துவிட்டார். அவரது புத்தகத்தில் என்ன எழுதியுள்ளார் என்பதை முழுவதும் படித்துப் பார்த்துவிட்டே கருத்து கூற முடியும் என்றார் திராவிட்.

நான் பயிற்சியாளராக இருக்கும்வரை இந்திய அணியில் நீ இடம்பெற முடியாது என்று கிரேக் சேப்பல் கூறினார் என்றார் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: அவர் இவ்வாறு கூறியதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்துப் போனேன். அப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. சேப்பலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவதா? கேப்டனிடம் இது குறித்துப் பேசுவதா என்று புரியவில்லை. என்னை ஏன் குறிவைத்தார் என்பதும் விளங்கவில்லை.

அவர் பயிற்சியாளராக இருந்த காலகட்டம்தான் இந்திய அணியின் இருண்ட காலகட்டம். எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவருக்கு என்று ஒரு திட்டம் உள்ளது. தனிப்பட்ட விஷயங்களிலும் மூக்கை நுழைக்கிறார். அவரது கருத்துடன் உடன்படாவிட்டால் ஓரம்கட்டிவிடுவார்.

அவர் எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட நினைத்தார். நான் அணியில் இடம்பெறாத ஓராண்டில் நான் மீண்டும் அணியில் இடம்பெறுவதைத் தடுத்துவந்தார். தனது விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் சூழ்நிலையை தனது கட்டுக்குள் வைத்திருந்தார். 2008இல் ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தபோது அவர் அந்த அணியின் ஆலோசகராக வந்திருந்தார். அவரைப் பார்த்தபோதெல்லாம் சிறப்பாகப் பந்துவீச வேண்டும் என்ற ஆக்ரோஷமே மேலோங்கி நின்றது. அதனால்தான் அந்தத் தொடரில் இந்தியா 2-0 என வென்றது என்றார் ஜாகீர் கான்.

கீர்த்தி ஆசாத், மணீந்தர் சிங் புகார்: கிரேக் சேப்பல் பயற்சியாளராக இருந்தபோது இந்திய கிரிக்கெட் வீழ்ச்சி கண்டது என்று முன்னாள் வீரர்கள் கீர்த்தி ஆசாத், மணீந்தர் சிங் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Check Also

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *