தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், சிதம்பரம் பைபாஸ் சாலையில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நாளை பிரச்சாரம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு நாளை ஆதரவு திரட்டுகிறார். இதற்காக வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க, கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடனும், நாற்பதும் நமதே என்ற வெற்றி முழக்கத்துடனும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா சூறாவளிப் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 3-ம் தேதி காஞ்சிபுரத்தில் தமது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஸ்ரீபெரும்புதூர், நாகை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் கழக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செல்லும் இடங்களில் எல்லாம், லட்சக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து, தங்களது பேராதரவை தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமது தேர்தல் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக நாளை, சிதம்பரம் தனித் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பெரம்பலூர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளருமான திரு. மா. சந்திரகாசிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். இதற்காக, சிதம்பரம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பிரம்மராயர் கோயிலுக்கு அருகே, தனியாருக்குச் சொந்தமான இடங்களில் அனுமதி பெற்று பிரமாண்டமான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையும், ஹெலிகாப்டர் இறங்குதளமும் அமைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில், ஆங்காங்கே அலங்கார வளைவுகளும், கொடி தோரணங்களுடன் பதாகைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, தங்கள் தொகுதிக்கு வருகை தந்து உரையாற்றவிருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக, சிதம்பரம் தொகுதி மக்களும், கழகத் தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

Check Also

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடு விவரங்கள்

தமிழக அரசு சார்பில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெறுகிறது. இந்த …

Leave a Reply

Your email address will not be published.