‘நா காக்க!’ ‘நா காக்க!’ ஓ.பன்னீர்செல்வத்திற்கு மு.க.ஸ்டாலின் பதில்

சட்டசபையை கூட்டுவது தொடர்பாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை குறித்து, தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எனக்குக் கடுமையாகவும், தரம் தாழ்ந்தும் பதில் கூறி 10-11-2014 அன்று  ஓர் அறிக்கை விடுத்துள்ளார். கடந்த 7-11-2014 அன்று தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஒப்புதலுடன், நான் ஓர் அறிக்கை விடுத்தேன். அதில் தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான பிரச்சினைகள் எழுகின்றன, மாநிலத்திற்குப் புதிய முதல்-அமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொதுவாக ஆண்டுதோறும் அக்டோபர் திங்களில் நடைபெறும் குளிர்காலச் சட்டமன்றக் கூட்டத் தொடரும் இந்த ஆண்டு நடைபெறவில்லை, தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளதால், அவர்களது உயிர்களைக் காப்பாற்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மேலும் தமிழக மக்களைப் பெரிதும் பாதிக்கும் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற பிரச்சினைகளையும் விவாதிக்க வேண்டியிருப்பதால் சட்டப் பேரவையினைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கையைத் தெரிவித்திருந்தேன்.

பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருக்கிறபோது முக்கியமான எதிர்க்கட்சி, தமிழகச் சட்டப் பேரவையைக் கூட்டச் சொல்லிக் கேட்டுக்கொள்கிற அளவுக்கா இங்கே ஜனநாயகம் உயிரோடு இருக்கிறது? ஜனநாயக ஆட்சியில் தானே சட்டமன்றம், பேரவைக் கூட்டம், அங்கே ஆரோக்கியமான விவாதம், பதில் எல்லாம் எவ்வித இடையூறுமின்றி நடைபெறலாம்.

ஜனநாயக நாட்டில் மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டப் பேரவையைக் கூட்டவேண்டும் என்றும், விவாதிக்க வேண்டும் என்றும் இதற்கு முன்பு எத்தனையோமுறை எதிர்க் கட்சிகளின் சார்பில் வேண்டுகோள்கள் விடப்பட்டுள்ளன. சட்டப்பேரவை ஒன்றும் ‘கொடநாடு எஸ்டேட்’ மற்றும் சிறுதாவூர் அரண்மனை போலதனி நபர் சொத்தல்ல; அ.தி.மு.க.வுக்கு மட்டும் பட்டா பாத்தியமுள்ள இடமுமல்ல.

அது தமிழக மக்களின் பொதுச் சொத்து; பேரவையில் அங்கம் வகித்திடும் அனைவருக்கும் உரிய பொதுச் சொத்து. மேலும் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தின் அறிக்கையில் தற்போது இலங்கையிலே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களுக்காக தமிழக அரசின் சார்பில் என்னென்ன உதவிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை எல்லாம் விளக்கியிருக்கிறார்.

2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி முடிவுற்று, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் 28-11-2011 அன்று இந்த 5 மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறையிலே கடந்த 3 ஆண்டு காலமாக வாடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு அவர்களின் குடும்பத்திற்கும், வழக்கிற்கும் அரசு நிதியைக்கொடுத்தார்களே தவிர, இந்த 3 ஆண்டு காலத்தில் அவர்களை விடுவிக்கமுடிந்ததா? அரசுப் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டால், அவர்கள் திரும்பிவந்து விடுவார்களா? அந்த 5 மீனவர்களையும் விடுவிப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுத்திருந்தால், அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பார்கள் அல்லவா?. அதைப்பற்றி எல்லாம் விவாதிக்கச் சட்டப்பேரவையைக் கூட்டுங்கள்; இந்தப் பிரச்சினையில் தமிழகமே ஒன்றிணைந்து ஒரே குரலில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வாய்ப்பு ஏற்படும் என்றால், சட்டசபையைக் கூட்ட ஸ்டாலின் ஆலோசனை தேவையில்லை என்று அறிக்கை விடுவதா ஒரு முதல்-அமைச்சருக்கான கண்ணியம்?.  சட்டப்பேரவையைக் கூட்டுமாறு கேட்டுக்கொள்வது, பன்னீர்செல்வத்தின் ‘அம்மா’அகராதிப்படி ‘குழம்பிய குட்டையிலே மீன் பிடிக்கின்ற செயலா? தி.மு.க. சட்டப்பேரவை குழுத் தலைவர் என்ற முறையில் எனக்கு உரிமை இல்லையா?.

ஓ.பன்னீர்செல்வம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று, 2002 மார்ச் 1-ம் தேதி வரை பொறுப்பிலே இருந்தபோது, சட்டப்பேரவையை ஒரு முறையாவது கூட்டியது உண்டா? பொதுவாக மாநிலத்தில் முதல்-அமைச்சராக இருந்தவர் மாறி, வேறொருவர் முதல்வர் பதவிக்கு வருகின்றபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சட்டப் பேரவையைக் கூட்டி, மாறுதலுக்கான தன்னிலை விளக்கத்தை அளித்து, நாட்டிலே நிலவும் அவசர முக்கியத்துவமான பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் விவாதிக்க வேண்டியது ஜனநாயக நாட்டிலே கடமையா இல்லையா என்பதை பன்னீர்செல்வம் யோசித்துப் பார்க்கவேண்டும்.
அவமானம்
பன்னீர்செல்வம் தனது அறிக்கையிலே தி.மு.க.விலே தந்தைக்கும், தனயனுக்கும் பனிப்போர் என்றெல்லாம் அந்தக் கட்சியிலே உள்ள நாலாந்தர மேடைப் பேச்சாளர் போல, தான் தற்போது முதல்-அமைச்சர் என்ற தற்காலிகத் தகுதியைக்கூட மறந்து விட்டு என்னைக் கிண்டல் செய்திருக்கிறார். பன்னீர்செல்வம் போன்றவர்கள் இப்படியெல்லாம் பிரச்சினைகளைக் கிளப்பி, சில வார ஏடுகளின் துணையோடு கழகத்தில் குழப்பம் விளைவிக்க முயலுவதை அறிந்து தான், நானே திட்டவட்டமாக தலைவர் கருணாநிதி தான் 2016-ம் ஆண்டு தேர்தலில் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக எங்களை எல்லாம் வழி நடத்துவார் என்று தெரிவித்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை நான் என்றுமே தந்தைக்குக் கட்டுப்பட்ட தனயன்; தலைவரின்கட்டளைக்குப் பணிந்து நடக்கும் தொண்டன் – என்பதை என்னுடைய கட்சித்தோழர்களும், பொது மக்களும் நன்கறிவார்கள்.

எனவே பன்னீர்செல்வம் போன்ற கோணல் புத்திக்காரர்கள் குடும்பத்திற்குள் தந்தை, தனயன் என்றெல்லாம் கூறிகுழப்பம் விளைவிக்க நினைத்தால், அது ‘ஆப்பசைத்த’ நிலைக்குத் தான் ஆளாக நேரிடும். தற்போது அங்கே வகிக்கும் தற்காலிக முதல்-அமைச்சர் பதவிக்கே ‘மன்னார்குடி’ குடும்பத்தினரால் எப்போது இடைஞ்சல் வருமோ; அவர்களால் ஏற்பட்ட ‘பனிப்போர்’ எப்போது முடியுமோ என்று தூக்கம் வராமல்புரண்டுப் புலம்பிக் கொண்டிருக்கும் பன்னீர்செல்வத்திற்கு இப்படி அறிக்கைவிடுவது வெட்கக்கேடு அல்லவா? அல்லது எங்கோ ஒரு தோட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட அறிக்கையிலே அப்படியே கையெழுத்திட வேண்டிய கொடுமை அவமானம் இல்லையா?.

‘ஸ்டாலின் ஆலோசனை தேவையில்லை’ என்று சர்வாதிகாரப் பாணியில் எடுத்தெறிந்து பேச முற்படுவது ‘பன்னீர்செல்வம்’என்ற பெயருக்குப் பெரும் இழுக்கைத் தேடிக் கொடுத்து விடும். எனவே பன்னீர்செல்வம் அவர்களே ‘நா காக்க!’ ‘நா காக்க!’

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published.