தமிழக மீனவர்கள் மரண தண்டனை விவகாரம்: ராஜபக்சேவுடன் பேசினாரா மோடி?

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள விவகாரம் தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌சேவுடன் தொலைபேசியில் பேசியதாக பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சாமி தெரிவித்திருக்கும் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

மாறாக இது குறித்து இப்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று அது சொல்லியிருக்கிறது.
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 5 பேருக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.இந்த விவகாரம் தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சேவும் ஞாயிறன்று தொலைபேசியில் பேசியதாக பாஜகவின் சுப்ரமணிய சுவாமி தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் சயத் அக்பருத்தினிடம் விளக்கம் கோரப்பட்டப்போது, அவர் இந்த தகவலை மறுக்கவுமில்லை உறுதிசெய்யவும் இல்லை.
“5 இந்திய குடிமகன்களை இந்தியாவிற்கு பத்திரமாக திரும்ப அழைத்துக் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையுமே நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

நாங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் எங்களுக்கு ஒரு சுமூகமான தீர்மானம் இதுவரை எட்டவில்லை. இது ஒரு முக்கியமான, சிக்கலான, உணர்வுப்பூர்வமான விவகாரம். இதில் நாங்கள் ஒரு சுமூகமான தீர்மானத்தை எட்டிய பிறகு நாங்கள் அதைப் பற்றி அனைவருக்கும் தெரிவிப்போம்.” என வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் சயத் அக்பருத்தின் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தன், இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், எனினும் சட்ட ரீதியில் மட்டுமல்லாமல் மற்ற வகையிலான நடவடிக்கைகளையும் அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Check Also

ஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லி மானக்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *