இந்தியாவில் தீவிரவாதம் மற்றும் தேசத்துக்கு எதிராக போர் புரிந்ததாக குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் மரண தண்டனை அளிக்கப்படுவது ஒழிக்கப்பட வேண்டும் என சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான ஆணையம் இந்திய மத்திய அரசிடம் திங்கட்கிழமை தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அளித்தது.
தமது இந்தப் பரிந்துரைகள் சமூகத்தில் அறிவுபூர்வமான, கொள்கை ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று தாங்கள் நம்புவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
அதன் மூலம் ஆரோக்கியமானதொரு விவாதம் தோன்றும் எனவும், அது மரண தண்டனையை முற்றாக ஒழிக்கும் இலக்கை நோக்கிய பாதையை அமைக்கும் எனத் தாங்கள் கருதுவதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
“மாற்ற முடியாத விரைவான நடவடிக்கை தேவை”
அவ்வகையில் இந்தியாவில் மரண தண்டனையை முற்றாக ஒழிப்பதற்கான முன்னெடுப்பு, விரைவாகவும், மாற்ற முடியாததாகவும் இருக்கும் என தாங்கள் ஆழமாக நம்புவதாகவும் சட்ட ஆணையத்தின் அறிக்கையின் நிறைவுப் பகுதி கூறுகிறது.
குற்றச்செயல்கள் என்று வரும்போது, தீவிரவாதம் தொடர்பான குற்றங்களைத் தனிமைப்படுத்தி பார்ப்பதற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான காரணங்கள் ஏதும் இல்லை எனவும் சட்ட ஆணையத்தின் பரிந்துரை தெரிவிக்கிறது.
ஆனால் தீவிரவாதம் மற்றும், தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படாதது நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எனும் ஐயங்கள் அடிக்கடி தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் எழுப்ப்ப்படுகின்றன என அந்த ஆணையம் சுட்டிக்காட்டுகிறது.
மரண தண்டனை இந்தியாவில் ஏன் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு பல எடுத்துக்காட்டுக்களையும், சான்றுகளையும் இந்திய சட்ட ஆணையம் தமது அறிக்கையில் விரிவாக விளக்கியுள்ளது.
கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதன் மூலம், சமூகத்தில் குற்றச்செயல்களைக் தவிர்க்க முடியும் என்றால், ஆயுள் தண்டனை அளிக்கும் பலனைவிட மரண தண்டனை எவ்வகையிலும் கூடுதல் பலனை அளித்துவிடாது எனவும் சட்ட ஆணையம் தனது பரிந்துரையில் முதன்மைப் படுத்தியுள்ளது.
செய்த குற்றம் அல்லது தவறுக்காக வருந்தித் திருந்துவது என்பது தண்டனையில் முக்கியமான ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றாலும், வழங்கப்படும் தண்டனை பழிதீர்க்கும் நோக்கில் இருக்கக் கூடாது எனவும் சட்ட ஆணையத்தின் பரிந்துரை கூறுகிறது.
“மரண தண்டனையால் பயனில்லை”
சட்ட ரீதியில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு, நீதி வழங்கப்படும் வேளையில், “கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்” எனும் நடைமுறைக்கு இடம் இருக்க முடியாது எனவும் அந்த ஆணையத்தின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
தண்டனை மூலமாகத் திருத்துதல் என்று இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள இலக்கை அடைவதில் மரண தண்டனை எந்த வகையிலும் உதவவில்லை என்றும் அந்த அணுகுமுறை தோல்வியையே தழுவியுள்ளது எனவும் நீதிபதி ஷா தலைமையிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் அந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக இருந்த நீதிபதி உஷா மெஹ்ரா, சட்டத்துறையின் முன்னாள் மூத்த அதிகாரிகள் பி.கே.மல்ஹோத்ரா மற்றும் டாக்டர்.சஞ்சய் சிங் ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய சட்ட ஆணையத்தின் இந்த அறிக்கை பரிந்துரை ரீதியிலானது மட்டுமே. அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் கடப்பாடு இல்லை.