தமிழக–கர்நாடாக எல்லையான பாலாறு பகுதியில் கடந்த 1993–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9–ந் தேதி சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் வைத்த கண்ணி வெடி தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 22 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்திய கர்நாடகா மாநில மைசூர் தடா கோர்ட்டு கடந்த 2001–ம் ஆண்டு, சந்தன வீரப்பன் கூட்டாளிகள் ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். கடந்த 2004–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து 4 பேரும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்பினார்கள். அந்த மனுக்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட 15 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை மனு காலதாமதமாக நிராகரிக்கப்பட்டதால் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறு சீராய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.