திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.
வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்ட விழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் பெருமாள் நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் வீதியுலாவுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
கடந்த 22-ஆம் தேதி நம்பெருமாள் கருட வாகனத்திலும், 23-ஆம் தேதி அனுமந்த வாகனத்திலும், 24-ஆம் தேதி யானை வாகனத்திலும், 25-ஆம் தேதி பூந்தேரிலும், 26-ஆம் தேதி தங்கக் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை சித்திரை தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு சித்திரை தேர் மண்டபத்தை 4.15 மணிக்கு வந்தடைந்தார். திருத்தேரில் 5.15 மணிக்கு நம்பெருமாள் மீன லக்னத்தில் எழுந்தருளினார். திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி காலை 6 மணிக்கு தொடங்கியது.
கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி மற்றும் அறங்காவலர்கள் குழுவினர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பக்தர்கள், “”கோவிந்தா, கோவிந்தா” என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 9.30 மணிக்கு நிலையை மீண்டும் வந்தடைந்தது.
தேரோடும் வீதிகள் அனைத்திலும் பக்தர்களுக்கு நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கிராமப் பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் நம்பெருமாளுக்கு நேர்த்திக் கடனாக மாடுகளை வழங்கினர். சில பக்தர்கள் மொட்டை அடித்துக் கொண்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.