மத்திய அமைச்சர் சிரஞ்சீவி தன் குடும்பத்தினருடன் வரிசையில் நிற்காமல் வாக்குச்சாவடிக்குள் செல்ல முயன்றதை வாக்காளர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதி வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வாக்களிக்க வந்தார் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி. ஆனால் அங்கு நீண்ட வரிசை நின்றது. சிறிது நேரம் வரிசையில் காத்திருந்த சிரஞ்சீவி. பின்னர் வரிசையில் இருந்து விலகிச் சென்று வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றார்.
அப்போது அவரை தடுத்து நிறுத்திய வாக்காளர் கார்த்திக், மத்திய அமைச்சர் என்பதால் வாக்குச்சாவடியில் உங்களுக்கு சிறப்பு சலுகை அளிக்க முடியாது என்றார்.
முதலில் அந்த வாக்காளரிடம் வாக்குவாதம் செய்த சிரஞ்சீவி, மற்ற வாக்காளர்களும் எதிர்ப்பு குரல் எழுப்பவே, தனது குடும்பத்தினருடன் மீண்டும் வரிசையில் நின்றார். இதனையடுத்து அமைச்சரை எதிர்த்து கேள்வி எழுப்பிய இளைஞரை அங்கே கூடி இருந்தவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சலசலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிரஞ்சீவியை செய்தியாளர்கள் சந்தித்தனர், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, “சட்டத்தை ஒரு போதும் நான் மீறியதில்லை. என் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவே வாக்குச்சாவடிக்குள் செல்ல முயன்றேன்” என்றார்.
தடுத்து நிறுத்திய கார்த்திக்:
சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தியது பற்றி கருத்து தெரிவித்த கார்த்திக், சிரஞ்சீவி மீது மரியாதை இருப்பதாகவும் ஆனால் அவர் வரிசையில் நின்றிருக்க வேண்டும் என்றும் கூறினார். சிரஞ்சீவி ஒன்றும் முதியவரோ அல்லது மாற்றுத்திறனாளியோ அல்ல அதனால்தான் அவரை வரிசையில் நிற்க சொன்தாகவும் தெரிவித்தார்