இந்து கடவுளை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத கிரிக்கெட் வீரர் டோனி க்கு ஆந்திர கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்தது.
பிஸினர் டுடே ஏப். 2013 இதழின் அட்டையில் வெளியான புகைப்படத்தை வைத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்துக் கடவுள் விஷ்ணு போல் வரையப்பட்டிருந்த படத்தில் தோனி படத்துடன் ‘காட் ஆஃப் பிக் டீல்” என்ற தலைப்பிட்டு வெளியானது. அதில் ஒரு கையில் ஒரு நிறுவனத்தில் ஷூவை தோனி வைத்திருந்தது போல் இருந்தது.
இதனை கண்டித்து ஆந்திர மாநிலம் அனந்தபூரில் விசுவ இந்து பரிஷத் தலைவர் ஷியாம்சுந்தர் என்பவர் பிப்ரவரி மாதம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அதில், கிரிக்கெட் வீரர் டோனி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகவும், இந்து கடவுளை இழிவுபடுத்தியதாகவும் புகார் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அனந்தபூர் கோர்ட்டு, டோனி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. 3 முறையும் சம்மன்கள் திரும்பி வந்துவிட்டன. டோனியும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே அனந்தபூர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டோனிக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதில், டோனியை கைது செய்து ஜூலை 16–ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. இதேபோல டெல்லி, புனே போன்ற சில நகரங்களிலும் டோனி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.