கூட்டுறவுத் துறையின் சார்பில் நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் அம்மா மருந்தகத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும் கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 9 அம்மா மருந்தகங்களை திறந்து வைத்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: ‘நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் கூட்டுறவுத் துறையால் புதிதாக அம்மா மருந்தகங்கள் தொடங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லூர் கூட்டுறவு பண்டகச் சாலையில் 10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகத்தை காணொலிக் காட்சி மூலமாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், கடலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம்; ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம்; மதுரை மாவட்டம் – பேரையூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மற்றும் கே.கே. நகரில் அமைந்துள்ள மதுரா கோட்ஸ் பணியாளர் கூட்டுறவு பண்டக சாலை;
சேலம் மாவட்டம் – செர்ரி ரோட்டில் அமைந்துள்ள சேலம் என்.ஜி.ஓ. கூட்டுறவு பண்டக சாலை மற்றும் தாரமங்கலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை; சிவகங்கை மாவட்டம் – காரைக்குடியில் அமைந்துள்ள சிவகங்கை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை;விருதுநகர் மாவட்டம் – சிவகாசி கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஆகிய இடங்களில் தலா 10 லட்சம் ரூபாய் செலவில் அமைந்துள்ள 9 அம்மா மருந்தகங்களையும் திறந்து வைத்தார்’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.