தி.மு.க தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ளது அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் புதன்கிழமை காலை சந்தித்தார்.
தனது பேத்தியின் திருமண பத்திரிகையை கருணாநிதிக்கு கொடுத்த ராமதாஸ், திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தும்படி கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “திமுக தலைவர் கருணாநிதி அரசியல் நாகரிகம் தெரிந்தவர். தமிழகத்தில் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்கும் தலைவர். அதனாலேயே எங்கள் வீட்டுத் திருமணங்களுக்கு தவறாமல் அவரை அழைக்கிறோம்” என கூறினார்.
இருப்பினும், கருணாநிதியை ராமதாஸ் திடீரென சந்தித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதேபோல ஒரு திருமண நிகழ்வின் போதுதான் திமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. தனது பேரனின் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற போது திமுக – பாமக கூட்டணி முடிவு செய்யப்பட்டு தொகுதி பங்கீடும் உறுதியானது. அப்போது நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் போது திமுக உடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் அந்தக் கூட்டணி தோல்வியை சந்தித்தது.
பா.ம.க. நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணியின் மகள் சம்யுக்தாவுக்கும், மகள் சாந்தியின் மகன் டாக்டர் பிரித்திவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய திருமணம் அடுத்த மாதம் 30-ந் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது.