தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மின்னணு தொழில் நுட்பத்தின் மூலம் கோரிக்கைகளைப் பெற்று, தகவல்களை அளிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து 3 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜீவ் அகர்வால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பொதுமக்கள் எழுத்துபூர்வ மாகவும், மின்னணு தொழில் நுட்பங்கள் மூலமாகவும் தகவல் களை கோரி மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இச்சட்டம் அமலுக்கு வந்து 9 ஆண்டுகளாகியுள்ள நிலையிலும், மனுக்களை ஆன்-லைன் மூலம் பெறுவதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
எனவே, தகவல்களை அளிப் பது தொடர்பாக தனி இணைய தளத்தைத் தொடங்கவும், அதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை அனுப்பவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்தும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். அதோடு, பிஹாரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது போன்று தொலைபேசி வழியாக கோரிக்கைகளை பெறும் திட்டத்தையும் கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் கூறியுள்ளதாவது: மத்திய, மாநில அரசுகளிடமும் இக்கோரிக்கையை மனுதாரர் முன்வைத்துள்ளதாகவும், அது தொடர்பாக இப்போதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இக்கோரிக்கை தொடர்பாக இன்னும் மூன்று வாரங்களில் முடிவு எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.