பெண் ஊழியரைத் தாக்கியது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதுகுறித்த விவரம்: சென்னை, காமராஜர் அரங்கத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் வளர்மதி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி ஜி.நாராயணன் ஆகியோர் தன்னைத் தாக்கியதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் போலீஸார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு இளங்கோவன், நாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அரசியல் காரணத்துக்காக தன்னைக் கைது செய்யும் நோக்கில் பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.நாராயணன் ஆகிய இருவரும் மதுரையில் 15 நாள்கள் தங்கியிருந்து, தல்லாகுளம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.