சென்னை இராயபுரம் கல்மண்டபம், சோமு தெரு 1 ஆம் சந்தில் உள்ள செங்காளம்மன் திருக்கோயிலில் இன்று (28.09.19) அதிகாலை 2.30 மணியளவில், அம்மன் சந்நிதி வெளிப்புறத்தில் அமைந்துள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும் ஆலயத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள சுவர் வழியே அங்காளம்மன் திருக்கோயிலின் உட்புறம் குதித்து, அங்கே உள்ள ஆலய அலுவலக அறையின் பூட்டினை உடைத்து அங்கிருந்த சாவிகளை கொண்டு கொள்ளையடிக்க முயல, அங்கு ஒன்றும் இல்லாத காரணத்தால், அலுவலகத்தில் இருந்த மடிக்கணினியினை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்
இன்று மகாளய அமாவாசை என்பதால் விடியற்காலையில் ஆலய குருக்கள் திரு. ராஜசேகர் வந்து பார்த்தபோது கொள்ளையர்களின் அட்டகாசம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக குருக்கள் இராயபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்க விரைந்து வந்த காவலர்கள் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டனர். அங்கு உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்ததில் இக் கொள்ளையில் முகத்தை முடியபடி 25 வயதுடைய இளைஞர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.
செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பிரதோஷம், அமாவாசை தினங்களில் இக் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் அமாவாசை முன்னிரவே இந்த கொள்ளை நடந்திருப்பதும், அங்காளம்மன் ஆலயத்தின் நுழைவு வாயிலில் உள்ள உண்டியலை கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருந்தால் பாதுகாப்பு அலாரம் ஒலித்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில் இக் கொள்ளையர்களை கண்டுபிடிக்க புலன் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் கடந்த பத்து நாட்களுக்குள் இதே கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையினை குறிப்பாக அதிகாலை 2 மணியிலிருந்து 3 மணிக்குள் நிகழ்த்தியிருப்பதாக பகுதி வாழ் மக்கள் தெரிவித்தனர்.
செய்தியாக்கம்:
ஜீனியஸ் டீம்