பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை அண்ணா பல்கலைக்கழக www.annauniv.edu என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இதில் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 23, 24 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்தப் பிரிவினருக்கு மொத்தமுள்ள 500 இடங்களுக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வுக்கு 900 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இதில் 449 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள 51 இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

ஜூன் 25-ஆம் தேதி (புதன்கிழமை) மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. முதலில் கேட்கும் திறன் குறைபாடுடைய 44 பேருக்கும், அடுத்ததாக பார்வைக் குறைபாடுடைய 30 பேருக்கும், இறுதியாக கை, கால்கள் குறைபாடுடைய 239 பேருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் மொத்தமுள்ள 5,021 இடங்களுக்கு 384 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 71 பேரின் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன.

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 313 பேரில் 241 மாற்றுத்திறனாளிகள் இடங்களைப் பெற்றுச் சென்றனர். மீதமுள்ள இடங்கள் பொதுப் பிரிவு கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுவிடும்.

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

முதல் நாளான வெள்ளிக்கிழமை கட்-ஆஃப் மதிப்பெண் 200 முதல் 198.75 வரை பெற்றவர்கள் அழைக்கப்பட உள்ளனர். முதல் நாள் கலந்தாய்வு மட்டும் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6.30 மணிக்கு முடிக்கப்படும். கலந்தாய்வில் பங்கேற்க 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்த நாள்களில் 5 ஆயிரம் பேர் வீதம் அழைக்கப்படுவர். இரண்டாம் நாள் முதல், காலை 7.30 மணிக்கே கலந்தாய்வு தொடங்கப்பட்டு விடும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமும் கலந்தாய்வு தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்களும் கலந்தாய்வு அட்டவணைப்படி, கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உதயராஜ் கூறினார்.

Check Also

கல்வி கட்டணம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு…

பாசமிகு பள்ளி தாளாளர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *