அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ( 07-07-2014 – திங்கட்கிழமை) தொடங்கியது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு என்ஜினியரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 570 கல்லூரிகளில் உள்ள பி.இ. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி இந்த வருடம் பி.இ. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து விளையாட்டு பிரிவினருக்கும், மாற்றுதிறன் கொண்ட மாணவ-மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டது. பொது கலந்தாய்வு கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் கூடுதல் இடம் மற்றும் புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு 7 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி பொது கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பொது கலந்தாய்வில் 1 லட்சத்து 68 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்துகொள்கிறார்கள். முதல் நாளான இன்று மட்டும் 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 5 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதாவது அன்று முதல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. வழக்கத்தை விட இந்த வருடம் தினமும் 9 முறை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

கலந்தாய்வுக்காக மாணவ-மாணவிகளுக்கும், அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கும் குடிக்க குடிநீர் வசதி அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடக்கும் வளாகத்தில் செய்யப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வுக்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும் உட்கார்ந்து எந்த கல்லூரியில் எத்தனை இடங்கள் உள்ளது என்பதை அறிய பெரிய அளவில் திரைகள் உள்ள கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த கூடாரத்தில் உள்ள திரையில் எந்த கல்லூரியில் எத்தனை இடங்கள் உள்ளன என்பது குறித்த முழு விவரம் அவ்வப்போது காண்பிக்கப்படும். இது தவிர கலந்தாய்வுக்கு வருபவர்களுக்கு அடிப்படை சுகாதார வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.

Check Also

பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்ற கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம் – K.R. நந்தகுமார்

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Undefined variable: visibility_homepage in /home/kmaafxvc/geniustv.in/wp-content/plugins/kn-mobile-sharebar/kn_mobile_sharebar.php on line 71