தமிழகம் வழியாக கெயில், எரிவாயுக் குழாய் பதிப்பு: நீதிமன்றத் தடை நீட்டிப்பு

தமிழகத்தில் விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிக்கு விதிக்கப்பட்ட தடையை, இந்திய உச்சநீதிமன்றம் இன்று திங்கட்கிழமை மேலும் மூன்று வார காலத்திற்கு நீட்டித்துள்ளது.

வேளாண் நிலங்களுக்கு இந்த திட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், மத்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க மூன்று வார காலம் கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் தமிழக அரசு தரப்புக்கு காலவகாசம் வழங்கி மூன்று வார காலத்திற்கு தள்ளி வைத்தது.

இதனால் எரிவாயு திட்டத்திற்கான குழாய்களை தமிழ் நாட்டின் விவசாய வேளாண் நிலங்கள் வழியாக பதிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அப்போது மத்திய அரசு நிறுவனமான இந்திய எரிவாயு ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கெனவே நிலங்களில் குழாய்களைப் பதிக்க தேவையான பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்காக தேவையான குழாய்களை அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், பல நாட்களாக அவை திறந்தவெளியில் கிடப்பதால் இந்த வழக்கில் காலம் கடத்தக் கூடாது என்றும் வாதிட்டார். காலம் அதிகமாக வீணடிக்கப்படும் பட்சத்தில் குழாய்கள் சேதமடைந்து, பெருமளவில் பொருளிழப்பு ஏற்படும் என்றும் கூறினார்.

ஆனால் ஏற்கெனவே நிலங்களில் குழாய்களைப் பதிக்க தோண்டியுள்ள குழிகளை உடனடியாக சமன்படுத்தி அந்நிலங்களை அதன் முந்தைய நிலையில் விவசாயிகளிடமும் நில உரிமையாளர்களிடமும், ஒப்படைக்க வேண்டும், மேலும் விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை தொடரும் வகையில் ஏற்கெனவே பதிக்கப்பட்ட குழாய்களை இந்திய எரிவாயு நிறுவனம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் முன்னதாக கோரப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரிற்கு இடையே தமிழகம் வழியாக இயற்கை எரிவாயு எடுத்துச் சென்று விநியோகம் செய்யும் திட்டத்தினை செயல்படுத்த அதற்கான ஆணையம் பணியை துவங்கியது. இந்நிலையில் விளை நிலங்களுக்கு பாதிப்பை உண்டாக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாக மட்டும் அவற்றை பதிப்பதற்கு, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இந்திய எரிவாயு ஆணையத்திற்கு யோசனை கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *